இஸ்ரேலின் தாக்குதலுக்கு இடையே ஹமாஸ் இன்றி போர் நிறுத்தப் பேச்சு !

இஸ்ரேலின் தாக்குதலுக்கு இடையே ஹமாஸ் இன்றி போர் நிறுத்தப் பேச்சு !

காசா போர் நிறுத்த பேச்சுவார்த்தையை இன்று ஆரம்பிக்கத் திட்டமிட்டிருந்த
போதும் அதில் பங்கேற்பதில்லை என்று ஹமாஸ் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

காசாவில் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடரும் நிலையிலேயே ஹமாஸ் இந்த
முடிவை எடுத்துள்ளது.

போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைக்கு மத்தியஸ்தம் வகிக்கும் நாடுகளான அமெரிக்கா, எகிப்து மற்றும் கட்டார் இன்று (15) பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க அழைப்பு விடுத்திருந்தது.

இதற்கு தமது பிரதிநிதிகளை அனுப்ப இஸ்ரேல் இணங்கியது.

எனினும் இதில் தமது பிரதிநிதிகள் பங்கேற்க மாட்டார்கள் என்று லெபனானில் உள்ள ஹமாஸ் உறுப்பினர் அஹமது அப்துல் ஹாதி குறிப்பிட்டுள்ளார்.

போரை முழுமையாக முடிவுக்குக் கொண்டுவரும் உடன்படிக்கை ஒன்றை எட்டுவதில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆர்வம் காட்டாதது இதற்குக் காரணம் என்று ஊடகம் ஒன்றுக்கு அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘போர் நிறுத்தத்திற்கு மாறாக அவர் போரை நீடிக்க விரும்புவதோடு, மேலும் பிராந்திய மட்டத்தில் அதை விரிவுபடுத்த விரும்புகிறார்.

அவர் எமது மக்களுக்கு எதிராக தனது ஆக்கிரமிப்பை தொடரவும் அவர்களுக்கு எதிராக மேலும் படுகொலைகளை செய்யவும் பேச்சுவார்த்தைகளை ஒரு கவசமாக பயன்படுத்தி வருகிறார்’ என்று ஹாதி குறிப்பிட்டார்.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கடந்த மே மாதம் முன்வைத்த போர் நிறுத்த திட்டத்தின் அடிப்படையில் புதிய சுற்று பேச்சுகளை தொடர திட்டமிடப்பட்டுள்ளது.

எனினும் இதில் இஸ்ரேல் புதிய நிபந்தனைகளை விதித்திருப்பதை ஹமாஸ்
எதிர்த்து வருகிறது.

நான்கு மாதங்களுக்கு மேலாக நீடிக்கும் காசா போரை முடிவுக்குக் கொண்டு
வரும் பேச்சுவார்த்தைகளில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.

காசா போரை முழுமையாக முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஹமாஸ் வலியுறுத்துவதோடு தற்காலிக போர் நிறுத்தத்தை கோரும் இஸ்ரேல், ஹமாஸை முழுமையாக ஒழிக்கும் வரை போர் தொடரும் என்று கூறி வருகிறது.

எனினும் இன்றை பேச்சுவார்த்தை திட்டமிட்டபடி நடைபெறும் என்று அமெரிக்க
அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்கு ஹமாஸ் அமைப்பை கட்டார் சமாதானப்படுத்தும் என்று எதிர்பார்ப்பதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் காசாவின் மத்திய மற்றும் தெற்கின் நுஸைரத், மகாசி, கான் யூனிஸ் மற்றும் ரபா பகுதிகளில் இஸ்ரேல் நேற்றுக்காலை நடத்திய தாக்குதல்களில் குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கான் யூனிஸ் நகரில் மேலும் பல இடங்களில் இஸ்ரேல் புதிய வெளியேற்ற உத்தரவை பிறப்பித்துள்ளது.

மத்திய இஸ்ரேல் மீது பலஸ்தீன போராளிகள் ரொக்கட் குண்டுகளை வீசியதை அடுத்த இந்த உத்தரவு வந்துள்ளது.

கடந்த பல மாதங்களில் முதல் முறையாக இஸ்ரேலின் டெல் அவிவ் நகரை இலக்கு வைத்து பலஸ்தீன போராளிகள் நேற்று முன்தினம் நீண்ட தூர ரொக்கெட் குண்டுகளை வீசியுள்ளனர்.

மறுபுறம் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரை நகரான தம்முனில் இஸ்ரேல்
நேற்று நடத்திய ஆளில்லா விமானத்தாக்குதலில் ஐந்து பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செய்தி நிறுவனமாக வபா குறிப்பிட்டது.

டுபாஸ் நகரில் இஸ்ரேல் நடத்திவரும் சுற்றிவளைப் பின்போது இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி காசாவில் போர் வெடித்தது தொடக்கம்
மேற்குக் கரையில் பதற்றம் நீடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மறுபுறம் காசாவில் ஓர் ஆண்டை நெருங்கும் போரில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள்
எண்ணிக்கை தற்போது 40,000ஐ நெருங்கியுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )