ஜனாதிபதி தேர்தல் வேட்புமனுத் தாக்கல் : கொழும்பில் இன்று விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் !
ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இராஜகிரியிலுள்ள தேர்தல் செயலகத்தில் இன்று காலை 9.00 மணி முதல் 11.00 மணி வரை நடைபெறவுள்ளது. இதனால், அப்பகுதிகளில் விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இதற்கிணங்க இன்று காலை 8.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை இராஜகிரிய தேர்தல் செயலகம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில், விசேட போக்குவரத்துத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.
தேர்தல்கள் செயலகத்தை அண்மித்த பகுதிகள் விசேட பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இக்காலப்பகுதியில் உத்தியோகபூர்வ அல்லது தனிப்பட்ட தேவைகளுக்காக அப்பகுதிக்கு செல்வதை தவிர்த்துக் கொள்ளுமாறு தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க பொதுமக்களிடம் கேட்டுள்ளார்.
விசேட பாதுகாப்பு வலயம் ராஜகிரிய சரணமாவத்தையை உள்ளடக்கியதாக அமைவதுடன், அனுமதிக்கப்பட்ட உத்தியோகத்தர்கள் மற்றும் வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் அனைத்து பொது நடவடிக்கைகளும் இடைநிறுத்தப்படும் என்பதாலும், அப்பகுதியில் உள்ள அனைத்து அரச அலுவலகங்கள் மற்றும் மருத்துவமனைகள் குறிப்பிட்ட இக்காலப் பகுதியில் மூடப்பட்டிருக்கும் என்பதாலும் பொதுமக்கள் அப்பகுதியை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேட்புமனுக்கள் கையளிக்கப்பட்ட எந்தவொரு பேரணி அல்லது ஊர்வலங்களும் அப்பகுதியில் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதும் வாக்குச் சீட்டுகள் அச்சிடும் நடவடிக்கைகளை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வேட்பு மனுக்களை தாக்கல் செய்யும் வேட்பாளர்களுடன் வருகை தரும் பிரதிநிதிகளின் எண்ணிக்கையும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி வேட்பாளருடன் கட்சியின் செயலாளர் உட்பட இருவருக்கு மாத்திரமே வேட்பு மனு ஏற்பு அலுவலகத்திற்குள்
பிரவேசிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இவர்களைத் தவிர மேலும் மூவர் மட்டும் அலுவலக வளாகத்திற்குள் பிரவேசிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.