சமரிக்கு மீண்டும் ஐ.சி.சி. கௌரவம் !
இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக ஜூலை மாதத்தின் சர்வதேச கிரிக்கெட் கௌன்சிலின் சிறந்த வீராங்கனையாக இலங்கை மகளிர் அணித் தலைவி சமரி அத்தபத்து தெரிவாகியுள்ளார். அவர் கடந்த மே மாதத்திலும் இந்த கௌரவத்தை பெற்றிருந்தார்.
இதன்போது அவர் இந்திய நட்சத்திர ஆரம்ப வீராங்கனை ஸ்மிரிதி மன்தனா மற்றும் ஷபாலி வர்மா ஆகியோரை பின்தள்ளியே இந்த விருதை வென்றுள்ளார்.
கடந்த ஜூலை மாதத்தில் சமரி தலைமையிலான இலங்கை அணி ஏழு முறை சம்பியனான இந்தியாவை வீழ்த்தி முதல் முறையாக மகளிர் ஆசிய கிண்ணத்தை வென்றதோடு அவர் தனிப்பட்ட முறையிலும் சோபித்திருந்தார்.
34 வயதான சமரி அத்தபத்து ஐ.சி.சியின் மாதத்தின் சிறந்த வீராங்கனைக்கான கௌரவத்தை பெறுவது இது மூன்றாவது முறையாகும். இதன்மூலம் மகளிர் கிரிக்கெட்டில் அதிகபட்சமாக இந்த கௌரவத்தை பெறும் வீராங்கனை வரிசையில் மேற்கிந்திய தீவுகளின் ஹெய்லி மத்தியூஸுடன் அவர் இரண்டாவது இடத்தை பகிர்ந்துகொண்டுள்ளார். இந்த வரிசையில் அவுஸ்திரேலியாவின் ஆஷ்லே கார்ட்னர் (4 முறை) முதலிடத்தில் உள்ளார்.
சமரி தலைமையில் இலங்கை மகளிர் அணி கடந்த 12 மாதங்களில் சிறப்பாக செயற்பட்டு வருவதோடு இந்தக் காலப்பகுதியில் இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்காவுக்கு எதிரான டி20 தொடர்களில் இலங்கை முதல் முறை வெற்றியீட்டியமை குறிப்பிடத்தக்கது.