காசா போர் நிறுத்த பேச்சை அடுத்த வாரம் ஆரம்பிக்க இஸ்ரேல் இணக்கம் !

காசா போர் நிறுத்த பேச்சை அடுத்த வாரம் ஆரம்பிக்க இஸ்ரேல் இணக்கம் !

காசா போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையை எதிர்வரும் ஓகஸ்ட் 15 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு அமெரிக்கா, கட்டார் மற்றும் எகிப்து மத்தியஸ்தர்கள் விடுத்த கோரிக்கைக்கு இஸ்ரேல் இணங்கியுள்ளது. எனினும் ஹமாஸ் தரப்பில் இருந்து இது தொடர்பில் உடன் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.

காசாவில் ஓர் ஆண்டை தொடும் போர் பிராந்தியத்திலும் போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது. ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மைல் ஹனியே டெஹ்ரானில் பாடுகொலை செய்யப்பட்டதற்கு இஸ்ரேல் மீது பதிலடி கொடுக்க ஈரான் உறுதிபூண்டிருப்பதோடு, இஸ்ரேலின் வடக்கு எல்லையில் லெபனானின் ஹிஸ்புல்லா போராளிகளுடன் தினசரி மோதல் இடம்பெற்று வருகிறது. மறுபுறம் யெமன் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் நேற்றும் வர்த்தகக் கப்பல்கள் மீது தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

இந்நிலையில் அமெரிக்கா, கட்டார் மற்றும் எகிப்து வெளியிட்ட கூட்டு அறிக்கையில், போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிக்கும் உடன்படிக்கை ஒன்றுக்காக பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பதற்கு இஸ்ரேல் மற்றும் ஹமாஸுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஓகஸ்ட் 15 ஆம் திகதி டொஹா அல்லது கெய்ரோவில் நடத்துவதற்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கும் பேச்சுவார்த்தைக்கு தமது பிரதிநிதிகளை அனுப்புவதாக இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது.

‘எஞ்சியுள்ள பிளவுகளை சரிசெய்து தாமதம் இன்றி உடன்படிக்கையை செயற்படுத்துவதற்கே’ இந்த மூன்று நாடுகள் அழைப்பு விடுத்துள்ளன. ‘மத்தியஸ்தர்கள் என்ற வகையில், தேவைப்பட்டால், அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் வகையில், எஞ்சியுள்ள நடைமுறை சிக்கல்களைத் தீர்க்கும் இறுதித் திட்டத்தை முன்வைக்க நாங்கள் தயாராக உள்ளோம்’ என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கூட்டு அறிக்கையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், எகிப்து ஜனாதிபதி அப்தல் பத்தா அல் சிசி மற்றும் கட்டார் எமீர் ஷெய்க் தமீம் பின் ஹமத் அல்தானி ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மே 31 ஆம் திகதி முன்வைத்து, ஐ.நா. பாதுகாப்புச் சபையினால் உறுதி செய்யப்பட்ட திட்டத்தை அடிப்படையாகக் கொண்டே பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் முழு அளவிலான போர் நிறுத்தம் மற்றும் காசாவில் பிடித்து வைக்கப்பட்டிருக்கும் கணிசமான பணயக்கைதிகளை விடுவிப்பது குறித்து பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றபோதும் அவை அனைத்தும் எந்த முன்னேற்றமும் இல்லாமல் ஸ்தம்பித்துள்ளன. ஹமாஸ் முழு அளவிலான போர் நிறுத்தம் ஒன்றை வலியுறுத்துகின்றபோதும் ஹமாஸ் தோற்கடிக்கப்பட்டாலேயே போர் முடிவுக்கு வரும் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறி வருகிறார்.

ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மைல் ஹனியே படுகொலை செய்யப்பட்ட நிலையில் அதன் புதிய தலைவராக யெஹ்யா சின்வார் நியமிக்கப்பட்டுள்ளார். அது புதிய சுற்று போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளை மேலும் இறுக்கமாக்கும் என்று அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும் காசாலில் இஸ்ரேலின் தாக்குதல்கள் மற்றும் பலஸ்தீன போராளிகளுடனான மோதல் தொடர்ந்து நீடித்து வருகிறது. கடந்த வியாழக்கிழமை மாலை காசா நகரில் இரு பாடசாலைகள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 18க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாக காசா சிவில் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதலில் மேலும் 60க்கும் அதிகமானோர் காயமடைந்து 40க்கும் அதிகமானோர் காணாமல்போயிருப்பதாக அந்த நிறுவனத்தின் மூத்த அதிகாரியான முஹமது அல் முகையிர் குறிப்பிட்டுள்ளார். ‘காசாவில் உள்ள பாடசாலைகள் மற்றும் பொதுமக்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் இடங்கள் இலக்கு வைக்கப்படுவது தெளிவாகத் தெரிகிறது’ என்றும் அவர் கூறினார்.

காசா நகரில் கடந்த எட்டு நாட்களில் மக்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் ஒன்பது பாடசாலைகள் மீது இஸ்ரேல் குண்டு வீசி இருப்பதாக மனித உரிமைக் குழு ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.

மத்திய காசாவின் நுஜைரத் அகதி முகாமில் உள்ள வீடு ஒன்றின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டதாக சிவில் பாதுகாப்பு நிறுவனத்தின் பேச்சாளர்கள் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் தெற்கு நகரான கான் யூனிஸில் புதிய படை நடவடிக்கை ஒன்றை அறிவித்திருக்கும் இஸ்ரேலியப் படை அங்குள்ள பொதுமக்களை வெளியேற உத்தரவிட்டுள்ளது. அங்கு பலஸ்தீன போராளிகளுடன் தரை மற்றும் தரைக்குக் கீழ் மோதல் இடம்பெற்று வருவதாகவும் இஸ்ரேல் இராணுவ கூறியது. கான் யூனிஸில் கடந்த 24 மணி நேரத்தில் 30 வான் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் அது நேற்று கூறியது.

காசாவில் 11 மாதங்களுக்கு மேலாக நீடிக்கும் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 40,000 ஐ நெருங்கியுள்ளது.

பிராந்தியத்தில் அதிகரித்திருக்கும் போர் பதற்றத்தை தணிக்கும் முயற்சிகள் இடம்பெற்று வருகின்றபோதும் தெற்கு லெபனானின் நகூரா நகரில் இஸ்ரேல் நேற்று நடத்திய ஆளில்ல விமானத் தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டதாக லெபனான் பொது சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

ஏற்கனவே ஹிஸ்புல்லாவின் முன்னணி இராணுவத் தளபதி ஒருவர் பெய்ரூட்டில் கடந்த வாரம் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுப்பதாக ஹிஸ்புல்லா சூளுரைத்து வரும் நிலையில் இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே முழு அளவில் போர் வெடிக்கு அச்சுறுத்தல் உள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )