எக்ஸ்பிரஸ் பேர்ள் அனர்த்த பாதிப்பு : முதல் கட்ட நட்டஈடாக 10.2 மில்லியன் டொலர் கிடைத்தது !

எக்ஸ்பிரஸ் பேர்ள் அனர்த்த பாதிப்பு : முதல் கட்ட நட்டஈடாக 10.2 மில்லியன் டொலர் கிடைத்தது !

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீ அனர்த்தம் காரணமான பாதிப்புக்கு கப்பல் நிறுவனம் 10.2 மில்லியன் டொலரை முதற்கட்ட நட்டஈடாக வழங்கியுள்ளதாக நீதி இராஜாங்க அமைச்சர் அநுராத ஜயரத்ன தெரிவித்தார்.

அதேவேளை சட்ட மாஅதிபரின் அனுமதியின்றி நியூ டயமன் கப்பலை இலங்கையின் கடல் எல்லையிலிருந்து வெளியேற்றிய நபர், எதிர்க்கட்சி தலைவருடன் ஒன்றிணைந்துள்ளமை கவலைக்குரியதென்றும் நீதி இராஜாங்க அமைச்சர் சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று 27/2 கீழ் எதிர்க்கட்சி தலைவர் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இலங்கை கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளாகி மூழ்கிய எம்.வி. எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரம் மற்றும் ஏற்பட்ட இழப்புகளுக்கு நட்டஈடு பெற்றுக்கொள்வதற்காக சட்ட மாஅதிபர் ஊடாக சிங்கப்பூர் நாட்டில் சர்வதேச வணிக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

அதேபோன்று அந்தக் கப்பல் நிறுவனத்தின் உரிமையாளர் வாக்குமூலமும் வழங்கியுள்ளார். இலங்கை சார்பில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 6 ஆம் திகதி பதில் வாக்குமூலம் வழங்குவதாக சட்ட மாஅதிபர் அறிவித்துள்ளார். அதற்கான நடவடிக்கைகளை அதற்கான ஆலோசனை நிறுவனமும் சட்ட மாஅதிபர் திணைக்களமும் முன்னெடுத்துள்ளன.

இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள சிங்கப்பூர் நாட்டில் சர்வதேச வணிக நீதிமன்றத்தில் மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் நியமிக்கப்பட்டுள்ளது. டென்டன் ரொடிக்ஸ் மற்றும் டோவிக்ஸன் ஆகிய நிறுவனங்கள் இவ்விடயத்தில் இலங்கைக்கு சட்ட ஆலோசனைகளை வழங்குகின்றன.

சட்ட மாஅதிபர் திணைக்களத்தினால் மாத்திரம் இவ்விவகாரத்தில் தனித்து செயற்பட முடியாது என்பதால் சர்வதேச மட்டத்தில் சட்ட ஆலோசனைகள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தால் ஏற்பட்ட பாதிப்பு தொடர்பான மதிப்பீட்டு அறிக்கையை சபைக்கு சமர்ப்பிக்குமாறு எதிர்க்கட்சி தலைவர் வலியுறுத்தியிருந்தார்.

மதிப்பீடு தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்ட துறைசார் நிபுணர் குழுவினர், இடைக்கால மதிப்பீட்டு அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.

மேற்படி கப்பல் விபத்து தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் 4 அடிப்படை உரிமை மீறல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. நீதிமன்ற விசாரணைக்கு இந்த இடைக்கால மதிப்பீட்டு அறிக்கை பயன்படுத்தப்படுவதால் அந்த அறிக்கையை பகிரங்கப்படுத்துவது சாத்தியமற்றது.

இந்த விபத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்காக எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் நிறுவனம் 10.2 மில்லியன் டொலரை முதற்கட்ட நட்டஈடாக வழங்கியுள்ளது.

அதேவேளை கடற்றொழில் அமைச்சின் ஊடாக 10.2 மில்லியன் டொலர் செலவழிக்கப்பட்டுள்ளது. அதற்கான ஆவணங்களை பெற்றுக்கொள்ள முடியும். அத்துடன் விபத்தினால் கரையொதுங்கிய கழிவுகளை அகற்றும் பணிகளை நிறைவு செய்துள்ளதாக கப்பல் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது என்று தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )