தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பள அதிகரிப்பை வழங்குவதில் அரசு உறுதி !
மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அதிகரிக்கப்பட்டுள்ள 1,700 ரூபா சம்பள அதிகரிப்பை நிர்ணயித்தபடி வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான சிக்கல்களை தீர்க்கும் வகையில் சம்பள நிர்ணய சபைக்கு அந்த விடயம் உள்வாங்கப்பட்டுள்ளது என்றும் அவர் சபையில் தெரிவித்தார்.
அது தொடர்பில் சம்பள நிர்ணய சபை எத்தகைய தீர்மானத்தை மேற்கொண்டாலும் நிர்ணயித்தபடி அதே சம்பளத்தை தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்குவதற்கு தொழில் அமைச்சர் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார் என்றும் அவர் தெரிவித்தார்.
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் நேற்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,700 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்க மேற்கொண்ட தீர்மானத்திற்கு எதிராக தோட்டக் கம்பனிகள் நீதிமன்றத்திற்கு சென்றுள்ளன.
அதனயடுத்தே மேற்படி விடயம் சம்பள நிர்ணய சபைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,700 ரூபா சம்பளத்தை வழங்கும் நிலைப்பாட்டிலேயே அரசாங்கம் உள்ளதாகவும் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.