ஓய்வூதிய உயர்வை தடுக்கும் தேர்தல் ஆணைக்குழு !
தேர்தல் ஆணைக்குழுவின் பணிப்புரையையும் மீறி, அரசாங்க ஓய்வூதியக்காரர்களுக்கு 3,000 ரூபா இடைக்கால கொடுப்பனவை செப்டெம்பர் மாதத்திலிருந்து வழங்குமாறு அனைத்து அமைச்சு செயலாளர்களுக்கும் சுற்றறிக்கை வெளியிட்டது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளமை தொடர்பாக, இம்மாதம் 12 ஆம் திகதிக்கு முன்னர் தெளிவுபடுத்துமாறு தேர்தல் ஆணையாளர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க உள்நாட்டலுவல்கள், உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்னவுக்கு) கடிதம் மூலம் நேற்று (08) அறிவித்துள்ளார்.
தேர்தல் சட்டம் அமுலிலுள்ள காலப்பகுதியில் அரசாங்க ஓய்வூதியக்காரர்களுக்கு 3,000 ரூபா இடைக்கால கொடுப்பனவு வழங்குவது பொருத்தமற்றதென்பதால் அதனை ஒக்டோபர் மாதம் வரை ஒத்தி வைக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவில் நடைபெற்ற அமைச்சுக்களின் செயலாளர்கள் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதாகவும் அந்த அறிவுறுத்தலை மீறி சுற்றறிக்கையொன்றின் மூலம் செப்டெம்பர் மாதத்திலிருந்து வழங்குமாறு அமைச்சுகளின் செயலாளர்களுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த அறிவுறுத்தல்களை வழங்கியதன் மூலம் மாகாண சபை அமைச்சின் செயலாளர் அனைத்து அரசாங்க ஊழியர்களுக்கும் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் பிரிவு 104ஆ(4)(அ) இன் படி, அரசாங்கத்துக்கு சொந்தமான எந்தவொரு சொத்தையும் எந்தவொரு அரசியல் கட்சி அல்லது வேட்பாளரை விளம்பரப்படுத்த பயன்படுத்துவதைத் தடைசெய்ய தேர்தல் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் உள்ளதென்று கூறப்பட்டுள்ளது.
தேர்தல் மற்றும் பிரிவு (ஆ) உப யாப்பின்படி, அரசுக்கு சொந்தமான சொத்துக்களுக்குப் பொறுப்பான அனைத்து அதிகாரிகளும் தொடர்புடைய விதிமுறைகளை அமுல்படுத்தக் கடமைப்பட்டுள்ளன என்றும் கடிதத்தில் மேலும் கூறுப்பட்டுள்ளது.