இலங்கை டெஸ்ட் குழாத்தில் பத்துமுக்கு மீண்டும் அழைப்பு !
இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடருக்கு தனஞ்சயடி சில்வா தலைமையிலான 18 பேர் கொண்ட இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் புதுமுக வீரர்களாக வேகப்பந்து வீச்சாளர்களான மிலான் ரத்னாயக்க மற்றும் நிசல தாரக்க ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளனர்.
டெஸ்ட் அணியின் உப தலைவராக குசல் மெண்டிஸ் தொடர்ந்து செயற்படவுள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் சோபித்த சுழற்பந்து வீச்சாளர் ஜெப்ரி வெண்டர்சேயும் டெஸ்ட் குழாத்திற்கு அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதேபோன்று மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட்டில் சோபித்து வரும் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பத்தும் நிசங்க டெஸ்ட் அணிக்கு மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார்.
பத்தும் நிசங்க கடைசியாக 2022 ஜூலையிலேயே இலங்கை டெஸ்ட் அணியில் இடம்பெற்றிருந்தார்.
இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணி எதிர்வரும் ஓகஸ்ட் 14 தொடக்கம் 17 ஆம் திகதி வரை பயிற்சிப் போட்டி ஒன்றில் ஆடவுள்ளது. இதனைத்
தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டர், ஓல்ட் டிரபர்ட்டில் எதிர்வரும் 21 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இரு அணிகளும் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி லண்டன், லோர்ட்ஸ் மைதானத்தில் எதிர்வரும் ஓகஸ்ட் 29 ஆம் திகதியும் மூன்றாவது போட்டி செப்டெம்பர் 3 ஆம் திகதி லண்டன், கியா ஓவலிலும் ஆரம்பமாகவுள்ளன.
இதற்காக டெஸ்ட் குழாத்தை இலங்கை கிரிக்கெட் சபை நேற்று அறிவித்தது.
இதில் இடம்பெற்றிருக்கும் திமுத் கருணாரத்ன, அஞ்சலோ மத்தியூஸ் உட்பட அனுபவ வீரர்கள் ஏற்கவே இங்கிலாந்து பயணித்து பயிற்சிகளை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை டெஸ்ட் குழாம்: தனஞ்சய டி சில்வா (தலைவர்), திமுத் கருணாரத்ன, நிஷான் மதுஷ்க, பத்தும் நிசங்க, குசல் மெண்டிஸ் (தலைவர்), அஞ்சலோ மத்தியூஸ், தினேஷ் சந்திமால், கமிந்து மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, அசித்த பெர்னாண்டோ, விஷ்வ பெர்னாண்டோ, கசுன் ராஜித்த, லஹிரு குமார, நிசல தாரக்க, பிரபாத் ஜயசூரிய, ரமேஷ் மெண்டிஸ், ஜெப்ரி வெண்டர்சே, மிலான் ரத்னாயக்க.