காசா போர் 11ஆவது மாதத்தை தொட்டது : தொடரும் தாக்குதலில் மேலும் பலர் பலி
காசா போர் 11ஆவது மாதத்தை தொட்டிருக்கும் நிலையில் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்ந்து நீடிப்பதோடு, ஈரான் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்புகள் இஸ்ரேல் மீது பதில் தாக்குதல் ஒன்றை நடத்துவதில் தொடர்ந்து உறுதியாக உள்ள நிலையில் பிராந்தியத்தில் போர் பதற்றம் நீடித்து வருகிறது.
காசா மீது 303 ஆவது நாளாக இஸ்ரேல் நேற்று நடத்திய தாக்குதல் ஒன்றில் காசா நகரின் கிழக்கில் உள்ள குடியிருப்பு கட்டடம் ஒன்றில் தாய், தந்தை மற்றும் அவர்களது குழந்தை கொல்லப்பட்டிருப்பதோடு மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
யப்பா பாடசாலைக்கு அருகில் இருக்கும் அஹமது ஹமதா குடும்பத்திற்கு சொந்த மான வீட்டின் மீதே இஸ்ரேல் குண்டு வீசியதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா தெரிவித்துள்ளது.
அதேபோன்று மத்திய காசாவில் புரைஜ் அகதி முகாமின் கிழக்கே உள்ள குடியிருப்பு இல்லங்களை இலக்கு வைத்து இஸ்ரேலியப் படை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலர் காயமடைந்து அல் அக்ஸா தியாகிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக அந்த செய்தி நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை வடக்கு காசாவில் இஸ்ரேலியப் படை நேற்று புதிய வெளியேற்ற உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
பெயித் ஹனூன் பகுதியில் இருந்து ஹமாஸ் நடத்திய ரொக்கெட் தாக்குதல் ஒன்றை அடுத்தே அந்தப் பகுதியில் இருந்து மக்களை வெளியேறும்படி இஸ்ரேல் இராணுவம் உத்தரவிட்டுள்ளது.
இஸ்ரேல் எல்லைக்கு நெருக்கமாக உள்ள பெயித் ஹனூன் காசா போர் வெடித்த ஆரம்பத்தில் இஸ்ரேலின் கடும் தாக்குதலுக்கு இலக்கான பகுதியாகும்.
காசாவின் 2.3 மில்லியன் மக்களும் போர் வெடித்தது தொடக்கம் பல முறை இடம்பெயர்ந்து இருப்பதோடு அங்கு சுமார் 85 வீதமான பகுதி இஸ்ரேலின் வெளியேற்ற உத்தரவுக்கு உட்பட்ட இடங்களாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலின் தாக்குதல்களில் காசாவில் மேலும் 24 பேர் கொல்லப்பட்டு, 110 பேர் காயமடைந்திருப்பதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு நேற்று வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி கடந்த ஒக்டோபர் 7ஆம் திகதி தொடக்கம் காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 39,677 ஆக அதிகரித்திருப்பதோடு மேலும் 91,645 பேர் காயமடைந்துள்ளனர்.
எனினும் பெரும்பாலானோர் இடிபாடுகளில் சிக்கி இருப்பதாக அஞ்சப்படும் நிலையில் அவர்கள் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையில் கணக்கில் கொள்ளப்படவில்லை என்பதகுறிப்பிடத்தக்கது.
இதேவேனை ஹிஸ்புல்லா தளபதி ஒருவர் கடந்த வாரம்இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்ட நிலையில் அதற்கான பதிலடி வரப்போவதாக ஹிஸ்புல்லா தலைவர்
ஹசன் நஸ்ரல்லா மீண்டும் ஒருமுறை எச்சரித்துள்ளார்.
தொலைக்காட்சியில் உரையாற்றிய நஸ்ரல்ல, பதில் தாக்குதல் வலுவானதாக இருக்கும் என்று குறிப்பிட்டார்.
டெஹ்ரானில் வைத்து ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மைல் ஹனியே படுகொலை செய்யப்பட்டதற்கு இஸ்ரேல் மீது பதிலடி கொடுப்பது பற்றி ஈரானும் எச்சரித்து வருகிறது.