காசாவில் மேலும் இரு பாடசாலைகளில் இஸ்ரேல் தாக்குதல்: 30 பேர் வரை பலி !
பிராந்தியத்தில் போர் பதற்றம் உச்சம் பெற்றிருக்கும் சூழலில் காசா மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதோடு அங்கு இடம்பெயர்ந்த மக்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் மேலும் இரு பாடசாலைகள் மீது இடம்பெற்ற தாக்குதல்களில் குறைந்தது 30 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஹமாஸ் அரசியல் பிரிவுத் தலைவர் இஸ்மைல் ஹனியே ஈரான் தலைநகரில் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து போர் பதற்றம் உச்சம் பெற்றிருக்கும் நிலையில் லெபனானில் இருந்து உடன் வெளியேறும்படி மேலும் பல நாடுகளும் தமது நாட்டு பிரஜைகளை அறிவுறுத்தியுள்ளன.
இஸ்ரேல் மீது பதிலடி கொடுப்பது குறித்து ஈரான் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில் அங்கு நிலவும் பதற்றத்தை தணிக்கும் முயற்சியில் அமெரிக்கா மற்றும் மேற்குல நாடுகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன.
எனினும் ஈரான் புரட்சிக் காவல் படைதலைவர், ஹொஸைன் சலமி வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், ‘ஈரானின் தீர்க்கமான பதிலடியை பெறும்போது இஸ்ரேல் தனது மதிப்பீட்டில் செய்ததவறை புரிந்து கொள்ளும்.
எப்படி,எவ்வாறு பதில் கிடைக்கும் என்பதை அவர்கள் பார்க்கத்தான் போகிறார்கள்’
என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பெலனான் மற்றும் இஸ்ரேல் எல்லையில் தொடர்ந்து பரஸ்பரம் தாக்குதல்கள் இடம்பெற்று வருவதோடு தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் நேற்று இருவர் கொல்லப்பட்டதாக லெபனான் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள ஒரே வர்த்தக விமானநிலையத்தில் விமான சேவைகள் ரத்துச் செய்யப்படுவது அல்லது இடைநிறுத்தப்படும் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன.
அமெரிக்கா, பிரிட்டன், அவுஸ்திரேலியா, பிரான்ஸ், கனடா, தென் கொரிய, சவூதி அரேபியா, ஜப்பான், துருக்கி மற்றும் ஜோர்தான் உட்பட நாடுகள் தமது பிரஜைகளை லெபனானில் இருந்து விரைவாக வெளியேறுவதற்கு அறிவுறுத்தியுள்ளன.
மறுபுறம் காசாவில் போர் நிறுத்தம் ஒன்றை எட்டுவது தொடர்பில் கெய்ரோவில் கடந்த சனிக்கிழமை புதிய சுற்று பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்ற போதும் அதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை என்று செய்தி வெளியாகியுள்ளது.
இந்நிலையில் காசா நகரில் இடம்பெயர்ந்த மக்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் ஹசன் சலாமா மற்றும் அல்நாசர் பாடசாலைகள் மீது இஸ்ரேல் நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தியது.
ஹமாஸ் கட்டளையகத்தை இலக்கு வைத்தே தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் கூறியது.
தாக்குதலுக்கு உள்ளான பாடசாலை ஒன்றில் இருந்து சடலங்கள் மீட்கப்படும் காட்சிகள் சமூக ஊடகத்தில் வெளியான படங்களில் தெரிகின்றன.
இதில் கொல்லப்பட்ட பெரும்பாலானோர் சிறுவர்கள் மற்றும் பெண்கள் என்று குறிப்பிட்டிருக்கும் பலஸ்தீன சிவில் பாதுகாப்பு அமைப்பு, மேலும் பலர் காணாமல் போயிருப்பதோடு அவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி இருக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இஸ்ரேலியப் படை கடந்த ஒரு வாரத்தில் காசாவில் உள்ள மூன்று பாடசாலைகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முன்னதாக கடந்த சனிக்கிழமை காசா நகரில் உள்ள ஹமாமா பாடசாலை மீது
நடத்திய தாக்குதலில் குறைந்தது 17 பேர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலின் தாக்குதல்களில் காசாவில்
குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டு மேலும் 71 பேர் காயமடைந்ததாககாசா சுகாதார அமைச்சு நேற்று வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
10 மாதங்களை தொடும் காசா போரில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 39,623 ஆக அதிகரித்திருப்பதோடு மேலும் 91,469 பேர் காயமடைந்துள்ளனர்.