இலங்கை-இந்திய டி20 தொடர் இன்று ஆரம்பம் : சகல டிக்கெட்டுகளும் விற்பனை!

இலங்கை-இந்திய டி20 தொடர் இன்று ஆரம்பம் : சகல டிக்கெட்டுகளும் விற்பனை!

இலங்கை மற்றும் இந்திய அணிக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி இன்று (27) இரவு 07 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

டி20 உலகக் கிண்ணத்திற்கு பின்னர் இலங்கை அணி பங்கேற்கும் முதல் தொடர் இது என்பதோடு இரு அணிகளும் புதிய தலைவர், புதிய பயிற்சியாளரின் கீழ் முதல் முறை களமிறங்கவுள்ளனர் .

வனிந்து ஹசரங்க அணித் தலைமை பதவியில் இருந்து விலகிய நிலையில் சரித் அசலங்க தலைவராக செயற்படவிருப்பதோடு சனத் ஜயசூரிய இடைக்கால பயிற்சியாளராக செயற்படுகிறார்.

மறுபுறம் டி20 உலகக் கிண்ணத்தை வென்ற இந்திய அணியின் தலைவர் ரோஹித் ஷர்மா டி20 சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற நிலையில் புதிய தலைவராக சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேபோன்று இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக கௌதம் காம்பீர் நியமிக்கப்பட்டிருக்கும் நிலையில் அவரின் பயிற்சியின் கீழ் ஆடும் முதல் தொடராகவும் இது அமையவுள்ளது.

இந்நிலையில் இந்தியத் தொடருக்கான இலங்கை குழாத்தில் இருந்து வேகப்பந்து வீச்சாளர்களான துஷ்மன்த சமீர சுகவீனம் காரணமாகவும் நுவன் துஷார உபாதை காரணமாகவும் கடைசி நேரத்தில் விலகியது பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

இவர்களுக்கு பதில் வேகப்பந்து வீச்சாளர்களான அசித்த பெர்னாண்டோ மற்றும் டில்ஷான் மதுஷங்க அழைக்கப்பட்டுள்ளனர்.

அண்மையில் நடந்த லங்கா பிரீமியர் லீக் தொடரில் சோபித்த அனுபவ வீரர்களான தினேஷ் சந்திமால், குசல் ஜனித் பெரேராவுடன் வேகப்பந்து வீச்சாளர் பினுர பெர்னாண்டோ மற்றும் இளம் சகலதுறை வீரர் சமிந்து விக்ரமசிங்க அணியில் இடம்பெற்றுள்ளனர்.

இலங்கை அணி இந்தியாவை கடைசியாக ஒருநாள் போட்டிகளிலேயே எதிர்கொண்தோடு அதிலும் கடைசியாக ஆடிய இரண்டு போட்டிகளிலும் முறையே 55 மற்றும் 51 ஓட்டங்களுக்கு சுருண்டு படுதோல்விகளை சந்தித்த நிலையிலேயே இன்று களமிறங்கவுள்ளது.

எனினும் சொந்த மைதானத்தில் ஆடும் இலங்கை கடந்த கால பின்னடைவை சுதாகரித்து ஆடுவது கட்டாயமாக உள்ளது.

மேலும் இன்றைய போட்டிக்கான சகல டிக்கெட்டுகளும் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

எனவே, போட்டிக்கான டிக்கெட்டுகளை வாங்க மைதானத்துக்கோ அல்லது டிக்கெட் விற்பனை செய்யும் இடத்துக்கோ ரசிகர்களை வர வேண்டாம் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

இந்தப் போட்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளதுடன், போட்டியைக் காண வரும் ரசிகர்களுக்காக மைதான நுழைவாயில் இன்று மாலை 4 மணிக்கு திறக்கப்படும் என பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )