ஜனாதிபதி தேர்தல் நடைபெறுமா ? இல்லையா ?

ஜனாதிபதி தேர்தல் நடைபெறுமா ? இல்லையா ?

ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி சற்று முன்னர் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறுமா? இல்லையா? என்ற வாதங்கள் எழுந்துள்ளன.

நாட்டின் 9வது ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி நடத்துவதற்கான  அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் சற்றுமுன்னர் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த தேர்தலை நாட்டுமக்கள் பெரிதும் எதிர்பார்த்திருக்கும் நிலையில் நேற்றைய தினம் (25) நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா சரத்பொன்சேகாவும் தங்களை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்துள்ளனர்.

அதே நேரம் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் ,எதிர்கட்சி தலைவருமான சஜித் பிரமேதாச தன்னை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிலைப்படுத்தி தேர்தலுக்கான பிரச்சாரங்களை ஆரம்பித்துள்ளதுடன் திசைகாட்டியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இலங்கை மாத்திரம் இன்றி வெளிநாடுகளிலும் தனது பிரச்சாரங்களை தீவரமாக மேற்கொண்டு வருகிறார்.

இது இவ்வாறு இருக்க நாட்டின் தற்போதைய ஜனாதிபதியும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க தற்போது வரை எவ்வித தேர்தல் பிரச்சாரங்களையும் முன்னெடுக்காமல் இருப்பது அரசியல் வட்டாரங்களில் சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

இலங்கையில் அனுபவமிக்க அரசியல்வாதிகளில் ஒருவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க. 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற அரகலய போராட்டத்தின் போது அப்போதைய ஜனாதிபதியாக இருந்த கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை வங்குரோத்து நிலையில் கைவிட்டு சென்றதையடுத்து பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க தற்காலிக ஜனாதிபதியாக நாட்டை பொறுப்பேற்றார்.

அதனை தொடர்ந்து பாராளுமன்றில் நடைபெற்ற வாக்கெடுப்பில் 134 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இலங்கையின் 08ஆவது நிறைவேற்றுஅதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவியேற்றார்.

அவர் பதவியேற்ற சில மாதங்களிலேயே நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஓரளவு சீராக்கினார், இதனால் மக்களின் ஆதரவையும் பெற்றார்.

இந் நிலையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் போட்டியிடுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்படும் நிலையில் தேர்தலுக்கான பிரச்சாரம் மற்றும் வேட்பாளர் தொடர்பிலான அறிவிப்புகள் தொடர்பில் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளாமல் இருப்பது அரசியல் வட்டாரத்தில் ரணிலின் அடுத்த திட்டம் என்ன என்பது தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ளது.

கடைசி நேரம் வரை இழுத்தடித்து ஏனைய தரப்புகளை குழப்பத்திற்கு உள்ளாக்குவது அவரது தந்திரமாகவும் இருக்கலாம்.

ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு  குறைந்த பட்ச கால எல்லையே இருக்கும் நிலையில் இந்த காலப்பகுதியில் வேட்பாளரை அறிவித்து பிரச்சாரம் செய்வது சிரமம் தான்.

இந் நிலையில் தேர்தலுக்கான திகதி இன்று (26) அறிவிக்கப்பட்டுள்ளதால் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி பதவியில் இருந்து விலகி பாராளுமன்ற உறுப்பினராக செயற்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இது இவ்வாறு இருக்க பாராளுமன்ற உறுப்பினரான  நாமல் ராஜபக்ஷ ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மொட்டு கட்சியை சிதறடித்து இரண்டாக பிரிந்துவிட்டார் என அண்மையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.

இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

இருப்பினும் ரணில் விக்ரமசிங்கேவிற்கு அரசியல் வட்டாரங்களில் ஆதரவு அதிகரித்துள்ள நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஒரு பகுதியினரும் மொட்டு கட்சியில் இருந்து ஒரு பகுதியினரும் ரணிலின் பக்கம் செல்லும் வாய்ப்புகள் உள்ளது

இதனால் சஜித்தின் எதிர்க்கட்சி தலைவர் பதவி நாமல் ராஜபக்ஷவிற்கு கிடைக்க வாய்ப்புள்ளது. அவ்வாறு நாமல் எதிர்க்கட்சி தலைவராக தெரிவாகினால் பாராளுமன்றில் ஓர் பிரளயம் கண்டிப்பாக ஏற்படும்.

அந்த சமயத்தில் தற்போதைய பிரதமரான தினேஷ் குணவர்தன தனது பதவியை இராஜினாமா செய்யும் வாய்ப்புகள் அதிகளவில் காணப்படுகின்றது.

அந்த சமயத்தில் நாமல்  எதிர்க்கட்சி தலைவராக தெரிவாகினால் அவருக்கு பிரதமர் பதவிக்கான வாய்ப்பும் உள்ளது. மேலும்,  பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் ரணில் மீண்டும் பாராளுமன்ற வாக்குகளின் மூலம் ஜனாதிபதியாக தெரிவாக வாய்ப்புள்ளது.

இது இவ்வாறு இருக்க பொலிஸ் மா அதிபராக கடமையாற்றி வந்த தேசபந்து தென்னகோன் அப்பதவியில் பணிகளைத் தொடர உயர் நீதிமன்றம் அண்மையில் இடைக்கால தடை உத்தரவொன்றை பிறப்பித்தது.

இதனால் நாட்டின் பாதுகாப்பிற்கும் தேர்தலை நடத்துவதிலும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது . இதனை காரணமாக கொண்டு ஜனாதிபதி தேர்தலை பிற்போட்டு ரணில் பாராளுமன்றத்தின் மூலம் ஜனாதிபதியை தெரிவாக வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுகின்றது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )