மன்னாரில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவிற்கு எதிராக பாதிக்கப்பட்ட மக்கள் போராட்டம்
மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இலுப்பைகடவை மற்றும் அந்தோனியார் புரம் கிராமங்களைச் சேர்ந்த ஏழை விவசாயிகள் தமக்கான காணி உரிமை கோரி இன்றைய தினம் திங்கட்கிழமை (22) மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக அடையாள கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.
மாந்தை மேற்கு பகுதியில் உள்ள சோழ மண்டலம் குளத்தின் கீழ் 30 வருடங்களுக்கு மேலாக அரசாங்க அனுமதியுடன் விவசாய செய்கையில் ஈடு பட்டிருந்த அந்தோனியார் புரத்தை சேர்ந்த மக்களுக்கு நபருக்கு தலா 02 ஏக்கர் காணி வீதம் வழங்குவதாகவும் அதன் ஊடக வாழ்வார செயற்பாடுகளை முன்னெடுக்க உதவுவதாகவும் அரசாங்கத்தினால் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இவ் வாக்குறுதியை அடிப்படையாக கொண்டு மக்கள் எந்த ஒரு காணி ஆவணங்கள் இன்றி பல வருடங்களாக அப்பகுதியில் வாழ்வாதார செயற்பாடுகளை முன்னெடுத்து வந்தனர்.
இவ்வாறான நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு குறித்த காணிகளை அந்தோனியார் புரம் மக்களுக்கு வழங்காது வெளிநாட்டை சேர்ந்த நபர் ஒருவர் உள்ளடங்களாக மன்னார் மாவட்டத்தை சேராத வவுனியா மற்றும் கொழும்பு பகுதிகளை சேர்ந்த செல்வந்தர்களுக்கு வழங்குவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு குறித்த நபர்களால் காணிகளை பண்படுத்தும் செயற்பாடும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந் நிலையில் தங்களுக்கு சொந்தமான காணியை தாங்கள் பூர்விகமாக பயன்படுத்திய காணியை தங்களுக்கு வழங்காது வெளிநாட்டை சேர்ந்த நபர்களிடமும் பணம் படைத்தவர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு காணி சீர்திருத்த ஆணைக் குழுவினர் அவர்களுக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் குறித்த போராட்டம் இன்று (22) காலை இடம்பெற்றுள்ளது.
குறித்த போராட்டத்தில் இந்த நாட்டில் ஏழைகளுக்கு நீதியே இல்லையா ? , அரச அதிகாரிகளே காணி மாபியாக்களின் கூட்டாளிகளா? அரச அதிகாரிகளே துரோகத்திற்கு துணை போகாதீர்கள், தமிழ் அரசியல் வாதிகளே ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கின்றீர்களா? போன்ற பல்வேறு வாசகங்களை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின் இறுதியில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க. கனகேஸ்வரன் இடம் போராட்டகாரர்கள் கையளித்த நிலையில் இவ்வாறு காணி தொடர்பான பிணக்குகளை நீண்ட நாட்கள் முடிவுத்தாமல் வைத்திருக்க முடியாது எனவும் மன்னார் மாவட்டத்தை சேர்ந்த மக்கள் பலருக்கு காணி இல்லாத நிலையில் வேறு மாவட்டத்தையும் வெளி நாட்டையும் சேர்ந்தவர்களுக்கு காணி வழங்குவதை ஏற்க முடியாது என அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
மேலும் இன்றைய தினம் (22) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு குறித்த காணி விடயம் தொடர்பாக மாவட்ட செயலகம் சார்பாக அறிக்கை ஒன்று சமர்ப்பிக்க உள்ளதாகவும் இன்றைய போராட்டம் தொடர்பான ஆவணங்களையும் அறிக்கையுடன் சமர்பித்து விரைவில் குறித்த பிரச்சினை தொடர்பில் தீர்க்கமான ஒரு முடிவை பெற்றுத் தருவதாகவும் அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.
எஸ்.ஆர்.லெம்பேட்