ஹிருணிகாவிற்கு பிணை !
2015 ஆம் ஆண்டு இளைஞர் ஒருவரை கடத்திச் சென்ற வழக்கில் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஹிருணிகா பிரேமச்சந்திரவிற்கு கொழும்பு மேல் நீதிமன்றில் இன்று பிணை வழங்கப்பட்டுள்ளது.
குறித்த பிணை கோரிக்கை இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா முன்னிலையில் எடுத்துக் கொள்ள்பபட்ட போது நீதவான் இந்த உத்தரவை வழங்கியுள்ளார்.
தனக்கு வழங்கப்பட்ட சிறைத் தண்டனைக்கு எதிராக ஹிருணிகா பிரேமச்சந்திர மேன்முறையீடு செய்துள்ள நிலையில், அவரை பிணையில் விடுவிக்குமாறு அவரது சட்டத்தரணிகள் முன்வைத்த பிணை கோரிக்கைக்கு அமைய இந்த உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய 50,000 ரூபா ரொக்கம் மற்றும் 500,000 ரூபா கொண்ட இரண்டு சரீரப் பிணைகளில் அவரை விடுதலை செய்யுமாறு நீதவான் உதரவிட்டார்.
பிணை உத்தரவுகளை அறிவித்த நீதிபதி, ஹிருணிகாவிற்கு வெளிநாடு செல்வதற்கும் தடை விதித்தார்.
தெமட்டகொடை பகுதியிலுள்ள கடை ஒன்றில் பணிபுரிந்த அமில பிரியந்த அமரசிங்க எனும் இளைஞர் ஒருவரை 2015 டிசம்பர் 21ஆம் திகதி ஹிருணிகா பிரேமச்சந்திரவிற்கு சொந்தமான டிபெண்டர் வாகனத்தில் கடத்திய வழக்கு விசாரணை முடிவில் அவருக்கு 3 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
29 குற்றங்கள் தொடர்பில் அவரது மெய்ப்பாதுகாவலர்கள் 8 பேரும் குற்றத்தை ஒப்புக் கொண்ட நிலையில், அச்சம்பத்திற்கு உதவி, ஒத்தாசை புரிந்ததாக ஹிருணிகா மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது .