காசாவில் குண்டு மழைக்கு மத்தியில் இஸ்ரேலின்டெல் அவிவ் நகரில் ஆளில்லா விமானத் தாக்குதல் !

காசாவில் குண்டு மழைக்கு மத்தியில் இஸ்ரேலின்டெல் அவிவ் நகரில் ஆளில்லா விமானத் தாக்குதல் !

காசா மீது இஸ்ரேல் தொடர்ந்து சரமாரித் தாக்குதல்களை நடத்தி
வரும் நிலையில் இஸ்ரேலின் பிரதான நகரான டெல் அவிவில் நேற்று இடம்பெற்ற அளில்லா விமானத் தாக்குதல் ஒன்றில் ஒருவர் கொல்லப்பட்டு
மேலும் 10 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்தத் தாக்குதலுக்கு பொறுப்பேற்றிருக்கும் யெமனின் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள், ‘ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனின் டெல் அவிவ் இலக்கு வைக்கப்பட்டது’ என்று சமூக ஊடகத்தில் தெரிவித்துள்ளனர்.

‘இடைமறிக்கும் அமைப்பைக் கடந்து ராடார்களால் அவதானிக்க முடியாத’ புதிய ஆளில்லா விமானத்தை பயன்படுத்தியே தாக்குதல் நடத்தியதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.

டெல் அவிவ் நகரின் அமெரிக்க தூதரகத்திற்கு அருகில் இடம் பெற்ற இந்த தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தப்படுவதாக குறிப்பிட்ட இஸ்ரேலிய இராணுவம், வான் இலக்குகளை இடைமறிக்கும் வான் பாதுகாப்பு அமைப்பு இயங்காதது குறித்து ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ளது.

‘தொலைதூரத்திற்கு பறக்கக்கூடிய மிகப்பெரிய ஆளில்லா விமானம் ஒன்றைப் பற்றியே நாம் பேசுகிறோம்’ என்று இஸ்ரேலிய இராணுவ அதிகாரி ஒருவர் தாக்குதலை அடுத்து செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.

இந்த வெடிப்பு இடம்பெற்ற பகுதிக்கு அருகில் இருக்கும் தொடர்மாடி குடியிருப்பில் இருந்து 50 வயதான ஆடவர் ஒருவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டதாக இஸ்ரேலிய அவசர சேவை பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

தெற்கு லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த தளபதி ஒருவர் இஸ்ரேலிய
தாக்குதலில் கொல்லப்பட்டதை அடுத்தே டெல் அவிவ் மீதான தாக்
குதல் இடம்பெற்றுள்ளது.

கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி காசாவில் போர் வெடித்தது தொடக்கம் ஹிஸ்புல்லா மற்றும் இஸ்ரேல் இடையே தினசரி மோதல் இடம்பெற்று வருவதோடு அது முழு அளவில் போர் ஒன்றாக உருவெடுக்கும் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது.

பலஸ்தீனர்களுக்கு ஆதரவாகவே செயற்பட்டு வருவதாக ஈரான் ஆதரவு ஹிஸ்
புல்லா மற்றும் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

எனினும் காசாவில் இஸ்ரேலின் தாக்குதல் தொடர்வதோடு அண்மைய நாட்களாக அங்கு இடம்பெயர்ந்த மக்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் ஐ.நா. பாடசாலைகள் இலக்கு வைக்கப்பட்டு வருகின்றன.

அண்மைய நாட்களில் காசாவில் உள்ள ஒன்பதாவது பாடசாலையாக நேற்று காசா நகரில் இருக்கும் பாடசாலை ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

இதில் அங்கு அடைக்கலம் பெற்றிருந்து இருவர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன
செய்திகள் கூறுகின்றன.

மத்திய காசாவின் புரைஜ் அகதி முகாமில் உள்ள வீடு ஒன்றை இலக்கு வைத்து இஸ்ரேல் இராணுவம் நேற்று நடத்திய செல் தாக்குதலில் குறைந்தது அறுவர் கொல்லப்பட்டதாக அல் ஜசீரா செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

அபூ ஹசனைன் குடும்பத்தைச் சேர்ந்த ஆறு உறுப்பினர்களே கொல்லப்பட்டதாக
அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

நுஸைரத் அகதி முகாமிலும் இஸ்ரேலியப் படை வீடு ஒன்றை இலக்கு வைத்து வியாழக்கிழமை இரவு தாக்குதல் நடத்தியது.

இதில் சிறுவர்கள் உட்பட எட்டுப் பேர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டுள்ளது.

இதில் குறைந்து 15 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்தப் போர் காசாவில் பெரும் எண்ணிக்கையான வீடுகள் மற்றும் உட்கட்டமைப்புகளை அழித்திருப்பதோடு கிட்டத்தட்ட அங்கு வாழும் அனைத்து மக்களையும் தமது வீடுகளை விட்டு வெளியேற்றியுள்ளது.

இஸ்ரேலிய முற்றுகையால் உணவு, குடிநீர், மருந்து உட்பட அடிப்படை பொருட்களுக்கும் பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது.

பலரும் சுகாதாரமற்ற சூழலில் வசித்து வருவதாக காசா சுகாதார
நிர்வாகம் குறிப்பிட்டிருப்பதோடு காசா கழிவுநீர் மாதிரிகளில் போலியோ தொற்றுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது.

‘மனிதாபிமான நிலைமை நாம் அனைவருக்கும் கறையை ஏற்படுத்தும் ஒன்றாக உள்ளது’ என்று ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஒன்பது மாதங்களுக்கு மேலாக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களில் காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 39 ஆயிரத்தை நெருங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் ஆதரவுடன் எகிப்து மற்றும் கட்டாரினால் முன்னேடுக்கப்பட்டு வரும் போர் நிறுத்த முயற்சிகளும் ஸ்தம்பித்துள்ளன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )