எண்ணெய் கப்பல் கவிழ்ந்து விபத்து ; ஒருவர் பலி
ஓமன் நாட்டின் கடற்பகுதியில் 16 ஊழியர்களுடன் சென்ற எண்ணெய் கப்பல் ஒன்று திங்கட்கிழமை (15) கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் உள்ள ஹம்ரியா துறைமுகத்தில் இருந்து ஒரு எண்ணெய் கப்பல் புறப்பட்டது. ‘பிரெஸ்டீஜ் பால்கன்’ என்ற அந்த கப்பல் ஏமனின் ஏடன் துறைமுகம் நோக்கி சென்று கொண்டிருந்தது.
இதில் இலங்கையை சேர்ந்த 3 ஊழியர்கள் மற்றும் இந்தியாவை சேர்ந்த 13 ஊழியர்கள் என மொத்தம் 16 பேர் இருந்தனர்.
இந்த கப்பல் ஓமன் நாட்டின் கடற்கரையில் இருந்து சுமார் 25 கடல் மைல் தொலைவுக்கு அருகே பயணித்துக் கொண்டிருந்தபோது திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதுகுறித்து தகவலறிந்த ஓமன் கடலோர காவல்படையினர் அங்கு விரைந்து கடலில் மூழ்கி மாயமான மீனவர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு இலங்கையை சேர்ந்த ஒருவர் உட்பட 09 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதுடன், ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மாயமான மற்ற 06 பேரையும் தேடும் பணியில் மீட்பு குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.