வியாபாரியை வேட்பாளராக்குவது பிறிதொரு விளைவின் ஆரம்பமே !
எவருக்கும் பயமில்லை, கடனில்லை என்று அரசியல் மேடைகளில் குறிப்பிடுபவர்கள்
2022 ஆம் ஆண்டு எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு கூட செல்ல முடியாமல் நாட்டை
விட்டு தப்பிச் சென்றதை மறந்து விட்டார்கள் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட வியாபாரியை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்க முயற்சிப்பது பிறிதொரு விளைவுக்கான ஆரம்பமாகும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
‘தவறான அரசியல் தீர்மானங்களினால் பலவீனமடைந்திருந்த சுதந்திரக் கட்சி மீண்டும்
உயிர் பெற்றுள்ளது.
பாரம்பரியமான சுதந்திரக் கட்சியின் மீது பெரும்பாலான மக்கள் இன்றும்
நம்பிக்கை கொண்டுள்ளார்கள்.
ஆகவே இந்த புதிய கூட்டணியின் இரண்டாவது மாநாட்டின் ஊடாக சகல சுதந்திரக்
கட்சியின் உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கிறேன்.
அனைவரும் புதிய கூட்டணியில் ஒன்றிணைய வேண்டும்.
அரசியல் நெருக்கடிகளினால் நாட்டில் மீண்டும் உறுதியற்ற அரசாங்கம் தோற்றம் பெறகூடாது என்பதை கருத்திற்கொண்டு சிரேஷ்ட அரசியல்வாதிகளை உள்ளடக்கிய வகையில் பலமான அரசியல் கூட்டணியை உருவாக்கியுள்ளோம்.
இன்னும் இரண்டு வாரங்களில் கூட்டணியை பலப்படுத்தி ஜனாதிபதித் தேர்தல் குறித்து
எமது தீர்மானத்தை அறிவிப்போம்.
பொருளாதாரப் பாதிப்பில் இருந்து நாடு மீண்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு விடுக்கப்படவுள்ள நிலையில் நாடளாவிய ரீதியில் தேர்தல் பிரசாரங்கள் இடம்பெறுகின்றன.
இதுவே ஜனநாயகம். இதனை வரவேற்கிறேன்.ஆனால் 2022 ஆம் ஆண்டு இவ்வாறான
ஜனநாயக சூழல் நாட்டில் காணப்படவில்லை.
அரசாங்கத்தை பொறுப்பேற்க தயார் என்று தற்போது குரல் எழுப்புபவர்வர்கள் 2022
ஆம் ஆண்டு நாடு மிக மோசமான நெருக்கடியை எதிர்க்கொண்ட போதுஅரசாங்கத்தை
பொறுப்பேற்கவில்லை.
தனிமனிதனாக இருந்து ரணில் விக்கிரமசிங்க நாட்டையும் நாட்டுமக்களையும் பொறுப்பேற்றார்.
நெருக்கடியான சூழலில் நாங்கள் எமது எதிர்கால அரசியல் பற்றி சிந்திக்காமல் அவருக்கு ஒத்துழைப்பு வழங்கினோம்.
எமது தீர்மானம் இன்று வெற்றிபெற்றுள்ளது.
எவருக்கும் கடனில்லை, பயமில்லை என்று நாட்டை கடனாளியாக்கியவர்கள் அரசியல்
மேடைகளில் குறிப்பிடுகிறார்கள்.
இவர்கள் 2022 ஆம் ஆண்டு எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு கூடச் செல்ல முடியாமல்
தலைமறைவாகி நாட்டை விட்டு தப்பி ஓடியதை மறந்து விட்டார்கள்.
யார் அச்சமடைந்து தப்பிச் சென்றது ,யார் நாட்டை கடனாளியாக்கியது என்பதை மக்கள் நன்கு அறிவார்கள்.
பலம்வாய்ந்த அரசியல் கட்சி என்று குறிப்பிட்டுக் கொள்பவர்கள் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்க முடியாமல் திண்டாடுகிறார்கள்.
2019 ஆம் ஆண்டு அரசியல் அனுபவமற்ற ஒருவரை ஜனாதிபதியாக்கிய தால் அரசியல் மற்றும் பொரு ளாதார ரீதியில் நெருக்கடிகள் தோற்றம் பெற்றன என்று குறிப்பிடப்படுகிறது.
இவ்வாறான நிலையில் இந்த கட்சி மீண்டும் அதே தவறை செய்ய முயற்சிக்
கிறது’ கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.