ஆஸ்துமா நோயாளர்கள் அதிகளவில் பதிவாகும் நாடுகளின் பட்டியலில் இலங்கை !
நாட்டின் 10 முதல் 15 வீதமான குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினருக்கு ஆஸ்துமா நோய்க்கான அறிகுறிகள் காணப்படுவதாக இலங்கை சுவாச நோய் நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஆஸ்துமா நோயாளர்கள் அதிகளவில் பதிவாகும் நாடுகளில் இலங்கையும் உள்ளடங்குவதாக அதன் தலைவர் விசேட வைத்தியர் நெரஞ்சன் திசாநாயக்க தெரிவித்தார்.
ஆஸ்துமா நோய் தொற்றா நோயாகக் காணப்பட்ட போதிலும், பரம்பரை ரீதியாக, அல்லது நீண்ட கால அடிப்படையில் இந்த நோய் உருவாகலாம் என அவர் குறிப்பிட்டார்.
இலகுவான மற்றும் சிக்கல்கள் அற்ற மருந்துகளின் மூலம் சிகிச்சை வழங்கப்பட்டால், ஆஸ்துமா நோயை முழுமையாக கட்டுப்படுத்த முடியும் என அவர் தெரிவித்தார்.
ஆஸ்துமா நோய் கட்டுப்படுத்தப்படாவிட்டால், பல சிக்கல்கள் ஏற்படக்கூடும் எனவும் இலங்கை சுவாச நோய் நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் விசேட வைத்தியர் நெரஞ்சன் திசாநாயக்க கூறினார்.
தமது நாளாந்த நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாது போகின்றமை, இதன் காரணமாக ஏற்படக்கூடிய உள மற்றும் சமூக ரீதியான சிக்கல்கள் ஆகிய விளைவுகள் இந்த நோய் கட்டுப்படுத்தப்படாமையினால் ஏற்படக்கூடும் என அவர் குறிப்பிட்டார்.
நீண்ட காலத்திற்கு ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்தாமல் விடுகின்ற பட்சத்தில், சுவாசக் கட்டமைப்பில் ஏற்படக்கூடிய கோளாறுகளினால் மரணம் ஏற்படலாம் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.
எனினும், ஆஸ்துமாவை இலகுவாகக் குணப்படுத்த முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.