‘விஷன் 2030’ ஜனாதிபதியிடம் கையளிப்பு
2030 ஆம் ஆண்டாகும் போது இலங்கையை நிலையான மற்றும் முழுமையான அபிவிருத்தியை நோக்கி வழி நடத்தும் வகையில் இலங்கை வர்த்தக சம்மேளனத்தினால் தயாரிக்கப்பட்ட விரிவான கொள்கைகளை உள்ளடக்கிய ஆவணம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் நேற்று (09) ஜனாதிபதி அலுவலகத்தில் கையளிக்கப்பட்டது.
‘விஷன் 2030’ ஊடாக அடுத்த ஐந்து ஆண்டுகளில் பொருளாதார ரீதியில் இலங்கை எந்தத் திசையில் பயணிக்க வேண்டும் என்பது தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அதற்காக அனைத்து துறைகளிலும் கொள்கை மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டிய விதம் குறித்தும் பொருளாதாரத்திற்கு கிடைக்கும் நன்மைகள் குறித்தும் இதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மொத்த தேசிய உற்பத்தியில் 6.5% வளர்ச்சி வீதத்தை எட்டுவது, பணவீக்கம், வேலையின்மை ஆகியவற்றை 5% ஆக குறைப்பது, கல்வி மற்றும் சுகாதார சேவைகளை மேம்படுத்துவது, விவசாயம் மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பை மேம்படுத்துவது உள்ளிட்ட நோக்கங்களை முன்னிலைப்படுத்தி இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
அரச – தனியார் கூட்டு முயற்சி, ஒழுங்குமுறை சீர்திருத்தம், உட்கட்டமைப்பு முதலீடு, காலநிலை மாற்றம் ஆகிய துறைகளில் எவ்வாறு தயாராக வேண்டும் என்பதையும் இந்த ஆவணம் விளக்கியுள்ளது.