தமிழகத்தில் அரசியல் கொலைகள் அதிகரிப்பு – எடப்பாடி பழனிசாமி
தமிழகத்தில் அரசியல் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் அதிகரிப்பதாக மதுரையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. தமிழக முழுவதும் அனைத்து குற்றங்களும் அதிகரித்துள்ளன.
சமீபகாலமாக பல்வேறு கட்சித் தலைவர்கள் மர்மமான முறையில் கொல்லப்படுகின்றனர்.
குறிப்பாக நெல்லையில் கொல்லப்பட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் பற்றி போலீஸார் விசாரிப்பதாகக் கூறுகின்றனர்.
ஆனாலும் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியவில்லை.
04 நாள் முன்பு சேலம் மாநகரத்தில் எங்கள் கட்சியின் மண்டல குழு முன்னாள் தலைவர் சண்முகம் படுகொலை செய்யப்பட்டார்.
2 நாளுக்கு முன்பு, சென்னையில் மாநில பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் படு கொலை செய்யப்பட்டுள்ளார். கொளத்தூர் தொகுதியிலேயே இச்சம்பவம் நடந்திருப்பதாக தெரிகிறது.
முதல்வர் தொகுதியிலேயே தேசிய கட்சியின் மாநிலத் தலைவர் படுகொலை செய்யப்பட்டிருப்பது சட்டம், ஒழுங்கு தமிழகத்தில் சந்தி சிரிக்கும் சூழலாக தான் பார்க்கப்படுகிறது.
மக்களுக்கு மட்டுமின்றி அரசியல் தலைவர்களுக்கும் பாதுகாப்பு இல்லை. பொலிஸாரையும் கண்டு யாருக்கும் பயமில்லை என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.