காசாவில் போர் தொடங்கி 09 மாதங்கள் நிறைவு !
காசா போர் நேற்றுடன் (7) ஒன்பதாவது மாதத்தை எட்டிய நிலையில் இஸ்ரேல் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி கடுமையான தாக்குதல்களை முன்னெடுத்திருப்பதோடு பலஸ்தீன போராளிகளுடனான மோதல் தொடர்ந்து நீடிக்கும் நிலையில் போர்
நிறுத்தம் ஒன்றுக்கான புதிய இராஜ தந்திர முயற்சிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கட்டார் மத்தியஸ்தர்கள் அண்மையில் போர் நிறுத்த முயற்சிகளை தீவிரப்படுத்திய நிலையில் அந்தப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்வதற்கு எதிர்வரும் நாட்களில் தூதுக்குழு ஒன்றை அனுப்புவதாக இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது.
எனினும் போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிப்பது தொடர்பில் உடன்பாடு ஒன்றை எட்டுவதில் ஹமாஸுடனான இடைவெளி தொடர்ந்து இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
‘பேச்சுவார்த்தைகளைத் தொடர்வதற்கு இஸ்ரேலிய பிரதிநிதிகள் இந்த வாரம் டோஹா செல்வதற்கு இணக்கம் எட்டப்பட்டுள்ளது. தரப்புகளுக்கு இடையே தொடர்ந்தும் இடைவெளி உள்ளது“ என்று இஸ்ரேலிய அரச பேச்சாளர் ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை குறிப்பிட்டிருந்தார்.
எனினும் போரை முடிவுக்குக் கொண்டுவரும் உடன்படிக்கை ஒன்றின் முதல்
கட்டத்தின் பின்னர் 16 நாட்களில் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கு படையினர் மற்றும் ஆண்கள் உட்பட இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிக்கும் அமெரிக்காவின் முன்மொழிவுக்கு ஹமாஸ் இணக்கத்தை வெளியிட்டிருப்பதாக ஹமாஸ் தரப்பை
மேற்கோள்காட்டி ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக உடன்படிக்கை ஒன்றை எட்டுவதற்கு முன்னர் நிரந்தர போர் நிறுத்தம் ஒன்றுக்கு இஸ்ரேல் இணங்க வேண்டும் என்று ஹமாஸ் வலியுறுத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேலினால் இது ஏற்கப்பட்டால் உடன்படிக்கை கட்டமைப்பு ஒன்றுக்கு இது வழிவகுக்கும் என்பதோடு போரை முடிவுக்குக் கொண்டுவரும் என்று இந்த அமைதி முயற்சியில் ஈடுபட்டிருக்கும் சர்வதேச மத்தியஸ்தர்களுக்கு நெருக்கமான பலஸ்தீன அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
ஹமாஸின் புதிய திட்டம் மத்தியஸ்தர்களால் அமெரிக்காவுக்கு அளிக்கப்பட்டிருப்பதோடு அதனை வரவேற்ற அமெரிக்கா இஸ்ரேலுக்கு வழங்கியுள்ளது என்று குறிப்பிட்ட ஹமாஸ் மூத்த அதிகாரி ஒசாமா ஹம்தான், ‘தற்போது பந்து இஸ்ரேல் பக்கம் உள்ளது’ என்று ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திற்குத் தெரிவித்தார்.
அமெரிக்க மத்திய உளவுப் பிரிவு (சி.ஐ.ஏ.) தலைவர் வில்லியம் பர்ன்ஸ்
பேச்சுவார்த்தைக்காக இந்த வாரம் கட்டார் செல்லவிருப்பதாக நெருக்கமான வட்டாரங்கள் மூலம் தெரியவருகிறது.
‘பேச்சுவார்த்தையில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டபோதும் தொடர்ந்தும் பணியாற்ற வேண்டி உள்ளது’ என்று அமெரிக்க அதிகாரி ஒருவர் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.
கடந்த ஒக்டோபர் ஏழாம் திகதி வெடித்த காசா போரில் கடந்த நவம்பரில் ஒருவராம் நீடித்த போர் நிறுத்தத்தில் காசாவில் பிடித்து வைக்கப்பட்டிருக்கும் சுமார் 240 பணயக்கைதிகளில் 80 பேர் விடுவிக்கப்பட்டது தொடக்கம் போர் நிறுத்த முயற்சிகள் தொடர்ந்து தோல்வி அடைந்து வருகின்றன.
பணயக்கைதிகளை விடுவிக்கும் உடன்படிக்கை ஒன்றுக்கு செல்வதற்கு இஸ்ரேல் அரசுக்கு எதிராக இஸ்ரேலில் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மத்திய காசாவில் இடம் பெயர்ந்த மக்கள் அடைக்கலம் பெற்றிருந்த பாடசாலை ஒன்றின் மீது கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற தாக்குதலில் குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
போராளிகளை இலக்கு வைத்தே தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது.
அல் நுஸைரத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் மீது இடம்பெற்ற இந்தத் தாக்குதலில் மேலும் 75 பேர் வரை காயமடைந்துள்ளனர்.
கொல்லப்பட்டவர்களில் சிறுவர்களும் இருப்பதாக சம்பவ இடத்தில் இருந்து ஐமன் அல் அட்ரூனி ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.
‘இலக்கு வைக்கப்பட்ட பகுதியை பார்க்க நாம் விரைந்து வந்தபோது சிறுவர்களின் உடல்கள் துண்டாக்கப்பட்டிருப்பதை கண்டோம்.
இது ஒரு விளையாட்டு மைதானம் இங்கே ஊஞ்சல்கள் மற்றும் விளையாட்டுப் பொருட்கள் இருந்தன’ என்று குறிப்பிட்டுள்ளார்.
காயமடைந்த பலரும் ஆபத்தான நிலையில் இருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று காசா சிவில் அவசர சேவை பேச்சாளர் மஹ்மூத் பசல் தெரிவித்துள்ளார்.
அடைக்கலம் தேடி தமது வீடுகளை விட்டு வெளியேறிய குடும்பங்களுக்கு
எந்த இடமும் பாதுகாப்பு இல்லை என்பதையே இந்தத் தாக்குதல் காட்டுகிறது
என்றும் அவர் கூறினார்.
காசாவில் உள்ள எட்டு வரலாற்று அகதி முகாம்களில் ஒன்றான அல் நுஸைரத்தில் இஸ்ரேல் கடந்த சனிக்கிழமை தொடக்கம் உக்கிர தாக்குதல்களை நடத்தி வருகிறது. முன்னதாக அந்த முகாமில் உள்ள வீடு ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டு மேலும் பலர் காயமடைந்ததாக மருத்துவர்கள்
தெரிவித்துள்ளனர்.
கடந்த சனிக்கிழமை இரவு இடம்பெற்ற தாக்குதல்களில் நான்கு ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டதாக ஹமாஸ் ஊடக அலுவலகம் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் குறிப்பிட்டதோடு தமது பணியாளர்கள் இருவரும் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள்
நிவாரண மற்றும் பணிகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
காசா போர் வெடித்தது தொடக்கம் குறைந்தது 158 ஊடகப் பணியாளர்கள் கொல்லப்பட்டிருப்பதாக காசா அரச ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக எகிப்து எல்லையை ஒட்டிய தெற்கு காசா நகரான ரபாவில் இஸ்ரேலிய தரைப்படையின் முன்னேற்றம் நீடித்து வரும் நிலையில் கடந்த சனிக்கிழமை இஸ்ரேலிய வான் தாக்குதலில் அங்கு நான்கு பலஸ்தீன பொலிஸார் கொல்லப்பட்டுள்ளனர்.
அவர்கள் சென்ற வாகனத்தை இலக்கு வைத்தே இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.
ஹமாஸ் ஆயுதப் பிரிவின் கடைசி படைப் பிரிவுகளை அழிக்கும் இலக்குடனேயே ரபாவில் படை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக இஸ்ரேல் கூறுகிறது.
எனினும் காசாவில் பலஸ்தீன போராளிகளிடம் இருந்து இஸ்ரேலிய படை தொடர்ந்து கடும் எதிர்ப்பை சந்தித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
வடக்கில் காசா நகரின் ஷெய்க் ரத்வான் பகுதியில் வீடு ஒன்றின் மீது இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலை அடுத்து அங்கு நேற்று ஆறு சடலங்கள் மீட்கப்பட்டதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டுள்ளது.
கடந்த ஒன்பது மாதங்களை எட்டி இருக்கும் காசா போரில் இஸ்ரேலின் தாக்குதல்களில் ஒவ்வொரு நாளும் கணிசமான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு வருவதோடு காசா முழுவதும் சின்னாபின்னமாக்கப்பட்டு அங்குள்ள சுமார் 90 வீதமான மக்கள் தமது
வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இஸ்ரேலின் முற்றுகையால் உணவு, நீர், மருந்து மற்றும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு நிலவும் சூழலில் அந்தப் பகுதி பஞ்சம் ஒன்றை நெருங்கி உள்ளது.
இந்தப் போரில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 38,000ஐ தாண்டி இருப்பதோடு கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் மற்றும் சிறுவர்களாவர்.
காசா போரை ஒட்டி இஸ்ரேலின் லெபனான் எல்லையிலும் போர் பதற்றம் அதிகரித்திருப்பதோடு ஹிஸ்புல்லா மற்றும் இஸ்ரேல் இடையே தினசரி மோதல் இடம்பெற்று வரும் சூழலில் அது முழு அளவில் போர் ஒன்றாக வெடிக்கும் அச்சம் அதிகரித்துள்ளது.
தெற்கு லெபனானில் ஹிஸ்புல்லா இலக்குகளை தாக்கியதாகவும் எல்லைப் பகுதியில் பீரங்கி தாக்குதல்களை நடத்தியதாகவும் இஸ்ரேல் இராணுவம் சனிக்கிழமை குறிப்பிட்டிருந்தது.
முன்னதாக சனிக்கிழமை காலை வடக்கு இஸ்ரேலின் சைரன் எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டதோடு லெபனானில் இருந்து வந்த சந்தேகத்திற்கு இடமான
வான் இலக்கை தகர்த்ததாக இஸ்ரேல் இராணுவம் கூறியது.
கிழக்கு லெபனானில் இஸ்ரேலிய ஆளில்லா விமானம் வாகனம் ஒன்றை இலக்கு வைத்து நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.