பீகாரில் பதினைந்து நாட்களில் இடிந்து விழுந்த 10 பாலங்கள் !

பீகாரில் பதினைந்து நாட்களில் இடிந்து விழுந்த 10 பாலங்கள் !

இந்தியாவின் பீகாரில் அடுத்தடுத்து பாலங்கள் இடிந்து விழுந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 15 நாட்களில் 10 பாலங்கள் இவ்வாறு இடிந்து விழுந்துள்ளன.

நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது.

ஓரிரு நாட்களுக்கு முன்னர் பெய்த கனமழையால் டெல்லி விமான நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது.

அதேபோல குஜராத் மாநிலம் ராஜ்கோட்டிலும் கனமழை காரணமாக விமான நிலைய மேற்கூரை இடிந்து விழுந்திருந்தது.

இந்நிலையில் பீகாரில் பெய்து வரும் கனமழை காரணமாக ஆற்று பாலங்கள் தொடர்ச்சியாக இடிந்து விழுந்துள்ளன.

கடந்த புதன் கிழமை பீகாரின் சிவான் மாவட்டம் கந்தகி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.

தியோரியா தொகுதியில் அமைந்துள்ள இந்த சிறிய பாலம், பல கிராமங்களை மஹ்ராஜ்கஞ்ச் பகுதியுடன் இணைக்கிறது.

இது பீகாரில் கடந்த 15 நாட்களில் நிகழ்ந்த 7 ஆவது சம்பவமாகும்.

இதனைத் தொடர்ந்து 8 ஆவது சம்பவமாக சாப்ர மாவட்டத்தில் உள்ள மற்றொரு சிறுபாலம் இடிந்து விழுந்திருக்கிறது.

பாபா தோத்நாத் கோயில் அருகே உள்ள ஆற்றின் மேல் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த பாலம் கட்டப்பட்டிருக்கிறது.

இது ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பாலம் இடிந்து விழுந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து 24 மணி நேரத்தில் சரண் மாவட்டத்தில் ஜந்தா பஜாரிலும், லஹ்லாத்பூரிலும் தலா ஒரு பாலம் என 2 பாலங்கள் இடிந்து விழுந்துள்ளன.

15 நாட்களில் 10 பாலங்கள் இடிந்து விழுந்துள்ளன.

இதனால் நிதிஷ் குமார் தலைமையிலான பா.ஜ.க கூட்டணி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.

பாலங்கள் இடிந்து விழுந்த இடங்களில் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளனர்.

“தற்போது இடிந்த விழுந்துள்ள சிறுபாலம் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டிருக்கிறது. சம்பவம் நடந்த பகுதியில் நாங்கள் ஆய்வை மேற்கொண்டோம்.

நீர் வளத்துறையை சேர்ந்த அதிகாரிகள் பாலம் இடிந்து விழுந்தது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

விரைவில் விபத்துக்கான காரணம் தெரிய வரும்” என்று அதிகாரிகள் கூறியுள்ளார்.

சரண் தவிர சிவான், மதுபானி, அராரியா, கிழக்கு சம்பாரண் மற்றும் கிஷன்கஞ்ச் உள்ளிட்ட மாவட்டங்களிலும் பாலம் இடிந்து விழுந்துள்ளது.

அனைத்து மாவட்டங்களிலும் நீர் வளத்துறை அதிகாரிகள் ஆய்வை மேற்கொண்டிருக்கின்றனர்.

ஆற்றில் மணல் அதிகப்படியாக அள்ளப்பட்டதால் நீரின் வேகம் அதிகரித்து பாலம் இடிந்து விழுந்திருக்கிறது என்று உள்ளூர் மக்கள் கூறியுள்ளனர்.

இந்த விவகாரம் மாநில அரசுக்கு தலைவலியை கிளப்பியுள்ள நிலையில், சீரமைக்கப்பட வேண்டிய நிலையில் உள்ள பாலங்கள் அனைத்தும் உடனடியாக அடையாளம் காணப்பட்டு சரி செய்யப்பட வேண்டும் என்று ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளுக்கு முதல்வர் நிதிஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )