பானி பூரிக்கு தடை

பானி பூரிக்கு தடை

இன்றைய நாகரிக சமுதாயம் பாரம்பரிய உணவு முறையில் இருந்து மெல்ல மெல்ல விலகி துரித உணவுகளையும், பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டுள்ள உணவுகளையும் சாப்பிடுவது அதிகரித்து வருகிறது.

இதனால் ஏற்படக்கூடிய பின்விளைவுகளையும் எதிர்கொண்டு வருகிறது. துரித உணவுகளால் ஏற்படக்கூடிய உடல்நிலை பாதிப்புகள் குறித்து தொடர்ந்து செய்திகள் வெளியாகின்றன. அந்த வகையில், கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் பானி பூரியில் புற்றுநோயை உண்டாக்கும் பொருட்கள் மற்றும் இரசாயனங்கள் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது.

கர்நாடகா முழுவதிலும் பல்வேறு பகுதிகளில் சாலையோர வியாபாரிகள், கடைகள், திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள் மற்றும் பூங்காக்கள், கல்வி நிறுவனங்கள், அலுவலகங்களுக்கு அருகிலுள்ள பகுதிகளில் சுமார் 200-க்கும் மேற்பட்ட பானி பூரி மாதிரிகளை கடைகளில் கர்நாடக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சேகரித்து ஆய்வுக்கு உட்படுத்தி உள்ளனர். அவற்றில் பல மாதிரிகள் உணவுப் பாதுகாப்பு சோதனைகளில் தோல்வியடைந்துள்ளன. மேலும், புற்றுநோய் ஆபத்தை விளைவிக்க கூடிய இரசாயனங்கள் அதில் இருப்பதாக தெரியவந்துள்ளது.

துரித உணவு பிரியர்களில் பலராலும் விரும்பப்படும் பானி பூரியில் மனிதர்களின் உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய பொருட்கள் பயன்படுத்தப்படுவது குறித்த தகவல் உணவு பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

இதுபற்றி மேலும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. புகார்களின் அடிப்படையில் கர்நாடக சுகாதாரத் துறையும் விசாரணை நடத்தி வருகிறது. இந்த ஆய்வின் முடிவில், பானி பூரியில் புற்றுநோயை உண்டாக்கும் இரசாயனங்கள் கலந்து இருப்பது உறுதி செய்யப்பட்டால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில சுகாதாரத்துறை மந்திரி தினேஷ் குண்டு ராவ் தெரிவித்துள்ளார்.

அதே சமயம், பொது மக்கள் தங்கள் உடல் நலனில் சிறப்பு கவனம் செலுத்தவேண்டும். ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடிய உணவுப் பொருட்களை வாங்கி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். தூய்மை மற்றும் சுகாதாரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் தினேஷ் குண்டு ராவ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இவரது டுவிட்டர் பதிவு வைரலாகி வருகிறது. பயனர்கள் பலரும் தங்கள் கருத்துக்களையும் கோரிக்கைகளையும் முன்வைத்தவண்ணம் உள்ளனர். உணவில் சுவையை கூட்டுவதற்காக சேர்க்கப்படும் அஜினோமோட்டோவை தடை செய்யவேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

கர்நாடகாவில் இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், தமிழகத்தில் பானி பூரி கடைகள் மற்றும் உணவகங்களில் சோதனை நடத்த உத்தரவிட்டுள்ளது.

அதன்படி உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனையை தொடங்கி உள்ளனர். சென்னையில் 50-க்கும் மேற்பட்ட பானி பூரி கடைகளில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் பெரும்பாலான கடைகளில் சுகாதாரமற்ற முறையில் பானி பூரி விற்பனை செய்தது கண்டறியப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )