அணி தலைவராக தோல்வியை சந்தித்த மண்ணில் பயிற்சியாளராக சாதித்த டிராவிட் ஓய்வை அறிவித்தார் !

அணி தலைவராக தோல்வியை சந்தித்த மண்ணில் பயிற்சியாளராக சாதித்த டிராவிட் ஓய்வை அறிவித்தார் !

இந்திய அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் ராகுல் டிராவிட் தனது பொறுப்பிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

இருபது – 20 உலகக் கிண்ணத்தை இந்திய அணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அவர் தனது ஓய்வை அறிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக ராகுல் டிராவிட் கடந்த 2021 நவம்பர் மாதம் முதல் இருந்து வருகிறார்.

அவரின் பதவிக் காலம் நடந்து முடிந்த இருபது 20 உலகக் கிண்ணத் தொடருடன் முடிவுக்கு வந்துள்ளது.

டிராவிட்டின் பயிற்சியின் கீழ் இந்திய அணி 2023ஆம் ஆண்டு நடந்த உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் மற்றும் 50 ஓவர் உலகக்கிண்ணத் தொடர் ஆகியவற்றின் இறுதிப்போட்டிகளில் தோல்வியடைந்திருந்தது.

இந்த நிலையில் ராகுல் டிராவிட், பயிற்றுவிப்பாளராக தனது கடைசி உலகக்கிண்ணத் தொடரை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார்.

இந்திய அணியின் தலைவராகவோ, ஒரு வீரராகவோ உலகக்கிண்ணத்தை கையில் ஏந்தி சாதிக்க முடியாத ராகுல் டிராவிட், ஒரு பயிற்றுவிப்பாளராக சாதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

2007-ஆம் ஆண்டு மேற்கிந்தியத்தீவுகளில் நடந்த உலகக் கோப்பையில் இந்திய அணி முதல் சுற்றோடு வெளியேறியபின், ராகுல் டிராவிட்டின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வரத் தொடங்கியது.

அந்தத் தொடரில் ஏற்பட்ட காயம் குறித்து டிராவிட் இ.எஸ்.பி.என் தளத்தில் எழுதிய கட்டுரையில் ,

“மேற்கிந்தியத்தீவுகளில் உள்ள ஸ்லோ விக்கெட் எங்களுக்குச் சாதகமாக இருக்கும் என நினைத்தேன். ஆனால், வங்கதேசத்துக்கு எதிரான எங்களின் தோல்வி நம்பிக்கையை உடைத்தது. முதல் சுற்றிலேயே இந்திய அணி வெளியேறியது. என் கிரிக்கெட் வாழ்க்கையில் அதைத்தான் மிகப்பெரிய வேதனையாக உணர்ந்தேன். ஒருவேளை சூப்பர்-8 சுற்றுக்கு தகுதி பெற்றிருந்தால், எங்களின் நம்பிக்கை வளர்ந்திருக்கும். உலகக்கோப்பை போன்ற பெரிய தொடர் எங்களுக்கு அடுத்தவாய்ப்பை வழங்கவில்லை, அடுத்த ஒரு மாதம் தாயகத்துக்கு திரும்பி மற்ற அணிகள் விளையாடும் கிரிக்கெட்டை பார்க்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. நேர்மையாகக் கூறினால் என்னால் என்னையே பார்க்க முடியவில்லை.” என தெரிவித்திருந்தார்.

ராகுல் டிராவிட் தலைவராக இருந்த 2003 முதல் 2007-ஆம் ஆண்டுவரை எதிர்பார்த்த அளவுக்கு இந்திய அணியைச் சிறப்பாக வழிநடத்த முடியவில்லை.

25 டெஸ்ட் போட்டிகளில் 8 வெற்றிகளையும், 79 ஒருநாள் போட்டிகளில் 49 வெற்றிகளையும் மட்டுமே பெற முடிந்தது.

அதிலும் 2007-ஆம் ஆண்டு மேற்கிந்தியத்தீவுகளில் நடந்த உலகக் கோப்பையில் முதல் சுற்றிலேயே ராகுல் டிராவிட் தலைமையில் இந்திய அணி வெளியேறியது.

இதன்பின் டிராவிட்டின் கேப்டன்ஷி, அவரின் திறமை மீது பி.சி.சி.ஐ நிர்வாகத்துக்கு சந்தேகம் எழுந்தது.

தொடர்ந்து 2009 ஆம் ஆண்டு ஒருநாள் அணியிலிருந்து டிராவிட்டை நீக்கியது.

ஆனால் அதன்பின் 2011-ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு மீண்டும் டிராவிட் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆனால், யாரும் எதிர்பாரா வகையில் இந்தத் தொடரில் விளையாடும்போதே டிராவிட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

தொடர்ந்து 2012ஆம் ஆண்டு நடைபெற்ற அவுஸ்திரேலிய தொடருடன் டெஸ்ட் மற்றும் உள்நாட்டுப் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக டிராவிட் அறிவித்தார்.

டிராவிட் தலைமையில் முதல்முறையாக மேற்கிந்தியத்தீவுகளில் இந்திய அணி டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது.

1971-ஆம் ஆண்டுக்குப்பின் இந்திய அணியால் டெஸ்ட் தொடரை மேற்கிந்தியத்தீவுகளில் வெல்ல முடியாமல் இருந்தநிலையில் 2006-ஆம் ஆண்டு 1-0 என்ற டெஸ்ட் தொடரை வென்று டிராவிட் தலைமையில் இந்திய அணி வரலாறு படைத்தது.

டிராவிட் தலைமையில் ஒருமுறைகூட ஐ.சி.சி சார்பில் நடத்தப்பட்ட போட்டியில் கோப்பையை வென்றதில்லை.

இந்தத் தொடரிலிருந்து டிராவிட் கிரிக்கெட் வாழ்க்கையின் அஸ்தமனம் தொடங்கியது.

இந்திய அணியிலிருந்து படிப்படியாக ஓரம் கட்டப்பட்டு அடுத்த 4 ஆண்டுகளில் கிரிக்கெட்டிலிருந்து முற்றிலுமாக டிராவிட் ஓய்வு பெற்றார்.

தொடர்ந்து 2015 ஆம் ஆண்டு, இந்தியாவின் 19 வயதுக்குட்பட்டோருக்கான அணிக்கு பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டார்.

பயிற்சியாளராக முதல் ஆண்டிலேயே வெற்றி பெற்ற டிராவிட்
2016 ஆம் ஆண்டில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண தொடரில் இந்திய அணியை இறுதிப்போட்டிவரை கொண்டு சென்றார்.

தொடர்ந்து 2018ஆம் ஆண்டு நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண தொடரில் பிரித்வி ஷா தலைமையிலான இந்திய அணியை சாம்பியன் பட்டம் வெல்ல வைத்தார்.

அதன்பின், 2019-ஆம் ஆண்டு பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடெமயின் (என்.சி.ஏ) தலைவராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டார்.

தொடர்ந்து, இந்திய அணிக்குப் பயிற்சியாளராக இருந்த ரவி சாஸ்திரியின் பயிற்சிக் காலம் முடிந்தபின், 2021ஆம் ஆண்டு இந்திய அணியின் பயிற்சியாளராக டிராவிட் நியமிக்கப்பட்டார்.

டிராவிட்டின் பயிற்சியில் இந்திய அணி 56 ஒருநாள் போட்டிகளில் 41 போட்டிகளில் வென்றது, 69 டி20 போட்டிகளில் 48 போட்டிகளில் வெற்றி பெற்றது. 5 டெஸ்ட் தொடர்களை வெற்றி பெற்றது , 2023 ஆசியக் கோப்பையை இந்திய அணி வென்றது.

இதையடுத்து, இறுதியாக மேற்கிந்தியத்தீவுகளில் நடந்த
ஐசிசி உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில்
இந்திய அணியை 17 ஆண்டுகளுக்குப்பின் இரண்டாவது முறையாக சாம்பியனாக்கினார் டிராவிட்.

இந்திய அணிக்கு தலைமை ஏற்று, முதல்சுற்றோடு தலைகுணிந்து எந்த மண்ணில் ராகுல் டிராவிட் வெளியேறினாரோ அதை கரீபியன் மண்ணில், இன்று இந்திய அணிக்கு டி20 சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று கொடுத்து தலைநிமிரச் செய்து இந்திய அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் பொறுப்பிலிருந்து ஓய்வு பெறுவதாக ராகுல் டிராவிட் அறிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )