காணாமல்போன இஸ்ரேலியப் பெண் மயங்கிய நிலையில் மீட்பு !
திருகோணமலையில் காணாமல்போன இஸ்ரேலிய பெண் வெளிநாட்டு சுற்றுலாப் பயணி மயங்கிய நிலையில் சல்லி கோவிலுக்கு அருகில் நேற்றைய தினம் (29) கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
இஸ்ரேல் நாட்டில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த 25 வயதுடைய பெண் சுற்றுலா பயணி திருகோணமலையில் மர்மமான முறையில் காணாமல் போன நிலையில், மூன்று நாட்களுக்கு பின்னர் நேற்றைய தினம் (29) கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
பொலிஸ், இராணுவம், பிரதேச செயலகம், உப்புவெளி பிரதேச சபை, சுற்றுலாப் பணியகம் ஆகியவை மீட்பு பணியில் ஈடுபட ஆளுநரால் பணிப்புரை விடுக்கப்பட்டது.
அதற்கமைய மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையை தொடர்ந்து குறித்த பெண் சல்லி கோவிலுக்கு அருகில் மயங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சுற்றுலா பயணி மருத்துவ பரிசோதனையின் பின், அவருடைய நாட்டு தூதரகத்தில் ஒப்படைக்குமாறு ஆளுநரால் கிழக்கு மாகாண சுற்றுலா பணியத்திற்கு பணிப்புரை விடுக்கப்பட்டடுள்ளது.
கடந்த 22ஆம் திகதி நாட்டுக்கு வருகை தந்த 25 வயதுடைய டேமர் எமிடாய் (Tamar Amitai) என்ற இஸ்ரேலிய பெண் சுற்றுலாப் பயணியே திருகோணமலைக்கு சென்றிருந்த நிலையில் காணாமல் போயிருந்தார்.
இந்தப் பெண் இணையவழி ஊடாக திருகோணமலையிலுள்ள ஹோட்டலில் அறை ஒன்றை முன்பதிவு செய்து, 22ஆம் திகதி அங்கு சென்று தங்கியுள்ளார்.
இந்நிலையில், அவர் 26ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளார். இதனையடுத்து, ஹோட்டலின் உரிமையாளர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 03 நாட்களின் பின் இஸ்ரேலிய பெண் சுற்றுலாப் பயணி மயங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.