ஓய்வை அறிவித்தார் விராட் கோலி !
சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
நடப்பு ஐசிசி உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று இரண்டாவது முறையாக கிண்ணத்தை சுவீகரித்தது.
இந்த போட்டியில் விராட் கோலி ஆட்டநாயகன் விருதைப் பெற்றார்
வெற்றிக்கு பின் பேசிய விராட் கோலி, “இதுவே எனது கடைசி டி20 உலகக் கிண்ணம் , இதுவே எனது கடைசி டி20 போட்டி இதைத் தான் நாங்கள் இதில் அடைய நினைத்தோம். ஒருநாள் நம்மால் ரன்களே அடிக்க முடியாது எனத் தோன்றும். அதன் பின் இது போன்று (ரன் குவிப்பது) நடக்கும். கடவுள் அற்புதமானவர். சரியான நேரத்தில் இப்போது இல்லை என்றால் எப்போதும் இல்லை என்ற நிலையில் சிறப்பான செயல்பாடு வெளிப்பட்டது. இதுவே இந்திய அணிக்காக எனது கடைசி டி20 போட்டி. இதில் உலகக்கோப்பை வெல்ல வேண்டும் என்று நினைத்தோம்” என தெரிவித்தார்.
அப்போது அவரிடம் ஹர்ஷா போக்லே, “நீங்கள் மிகப் பெரிய அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறீர்கள். இது தான் உங்கள் கடைசி டி20 போட்டியா?” எனக் கேட்டார்.
அதற்கு பதில் அளித்த விராட் கோலி, “ஆம், இதுவே கடைசி சர்வதேச டி20 போட்டி. இது அனைவருக்கும் தெரிந்த ரகசியம் தான். நாங்கள் தோற்று இருந்தால் நான் இதை அறிவிக்காமல் போயிருக்க மாட்டேன் என்றெல்லாம் இல்லை. அடுத்த தலைமுறைக்கான நேரம் இது. அவர்கள் டி20 யில் பல அற்புதங்களை செய்வார்கள். நாம் ஐபிஎல் தொடரில் அதை பார்த்து இருக்கிறோம்.” என விராட் கோலி தெரிவித்தார்.
2022 இருபதுக்கு 20 உலகக்கிண்ணத்திற்கு பின் விராட் கோலி, ஓராண்டு காலத்துக்கும் மேல் இந்திய டி20 அணியில் இடம் பெறவில்லை.
இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் விராட் கோலி இந்திய டி20 அணிக்கு திரும்பினார்.
2024 ஐபிஎல் தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், 2024 டி20 உலகக்கோப்பைக்கான அணியிலும் இடம் பெற்றார்.
தனது கடைசி டி20 உலகக்கோப்பை தொடரில் முதல் ஏழு போட்டிகளில் அவர் 75 ஓட்டங்களை மாத்திரமே பதிவுசெய்து இருந்தார்.
இந்த நிலையில் இறுதிப் போட்டியில் அவர் 59 பந்துகளில் 76 ஓட்டங்களை பதிவு செய்தார்.