இஸ்ரேலின் கடும் தாக்குதல்களுக்கு மத்தியில் கோடை வெப்பத்தால் காசாவில் புதிய நெருக்கடி !

இஸ்ரேலின் கடும் தாக்குதல்களுக்கு மத்தியில் கோடை வெப்பத்தால் காசாவில் புதிய நெருக்கடி !

காசாவின் வடக்கு, மத்திய மற்றும் தெற்கில் பொதுமக்கள் நிரம்பியுள்ள பகுதிகளின் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் மற்றும் பீரங்கிகள் நேற்று நடத்திய கடும் தாக்குதல்களில் பலர் கொல்லப்பட்டிருப்பதோடு தெற்கு காசா நகரான ரபாவில் இஸ்ரேலிய தரைப் படைகள் திட்டமிடப்பட்ட வகையில் வீடுகளை தகர்த்து வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

காசாவில் படை நடவடிக்கையின் தீவிரத்தை குறைக்கவுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யா கு சில நாட்களுக்கு முன்னர் குறிப்பிட்டபோதும் அங்கு உக்கிர தாக்குதல்கள் இடம்பெற்று வருவதோடு பலஸ்தீன போராளிகளுடனான மோதல்கள் தொடர்ந்து நீடித்து வருகின்றன.

காசாவில் போர் வெடித்து நேற்று 265 நாளாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் வடக்கு காசாவின் ஜபலியா அகதி முகாமில் ஆறு பேர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டது.

இதன்போது பலஸ்தீனர்கள் குழு ஒன்றின் மீது இஸ்ரேல் குண்டு வீசியதாக அது
குறிப்பிட்டுள்ளது.

பயித் லஹியா பகுதியில் வதி குடும்பத்திற்குச் சொந்தமான வீடு ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

காசா நகரில் சம்பரா பகுதியில் நான்கு வீடுகளை இலக்கு வைத்து நடத்தப்பட்ட வான்
தாக்குதல்களை அடுத்து அங்கிருந்து இரு சடலங்களை மீட்பாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

அங்கு இடிபாடுகளில் சிக்கி மேலும் பலர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

தெற்கு காசாவில் கான் யூனிஸ் நகரில் உள்ள அன் கன்சா பாடசாலை மீது இடம்பெற்ற தாக்குதல்களில் சிறுவர்கள் மற்றும் பெண்கள் உட்பட பலரும் கொல்லப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் பாடசாலையில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கி இருந்துள்ளனர்.

இந்நிலையில் காசா சிவில் பாதுகாப்பு நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் எரிபொருள் தீர்ந்து வருவதாகவும் மீட்புப் பணிகள் எந்த நேரத்திலும் நிறுத்தப்படலாம் என்றும் எச்சரித்துள்ளது.

அந்த நிறுவனம் நேற்று டெலிகிராமில் வெளியிட்ட அறிவிப்பில், ‘காசா நகரின் சப்ரா சுற்றுப்புறத்தில் தாக்கப்பட்ட நான்கு வீடுகள் மற்றும் சுஜையா பகுதியில் உள்ள இரண்டு தனித்தனி வீடுகளில் இருந்து உடல்களை மீட்டது மற்றும் உயிர் தப்பியவர்களை காப்பற்றும் பல பணிகளை மீட்புக் குழுவினர் நேற்று மேற்கொண்டனர்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

‘எரிபொருள் தீர்ந்து வரும் நிலையில் எமது பணியாளர்களால் பாரிய எண்ணிக்கையிலான இலக்குகளை கையாள முடியாதுள்ளது.

ஆக்கிரமிப்பு தொடர்வதால் வடக்கு காசா பகுதியில் சுகாதார கட்டமைப்பு கவலைக்கிடமான நிலையில் உள்ளது என்பதே உண்மை’ என்று மேலும் குறிப்பிட்டுள்ளது.

இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கையால் 2.3 மில்லியன் மக்கள் தொகை கொண்ட காசாவில் கிட்டத்தட்ட அனைவரும் போன்று வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டிருக்கு நிலையில் அங்கு நிலவும் கடுமையான வெப்பம் நிலைமையை மேலும் மோசமடையச் செய்துள்ளது.

காசாவில் மின்சார வசதி துண்டிக்கப்பட்டிருப்பதோடு சொற்பமான அளவே சுத்தமான நீர் உள்ளது. வெப்பம் அதிகரித்துள்ள சூழலில் குடும்பங்கள் கூடாரங்கள், ஐ.நா. பாடசாலைகளில் உள்ள மக்கள் நிரம்பி வழியும் தற்காலிக முகாம்கள் அல்லது அதிக நெரிசலுடன் தனியார் வீடுகளில் வசிக்கின்றனர்.

இவர்கள் வளிச் சீராக்கி வசதிகள், குளியல் வசதிகள் அல்லது ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் நோய்கள் அதிகரித்து வரும் நிலையில் சுகாதார வசதி இன்றியே உள்ளனர்.

கான் யூனிஸ் நகரில் உள்ள பாடசாலை வகுப்பறைகள் குடும்பங்கள் இடையே தற்காலிக முகாம்களாக பகிரப்பட்டுள்ளன.

இந்நிலையில் அதிகரிக்கும் வெப்பம் நுளம்புகள் மற்றும் மற்ற பூச்சிகளை அதிகரித்து சுகாதாரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று 38 வயதான அமல் நசை கவலையை வெளியிட்டுள்ளார்.

தனது மகன் உறங்குவதில்லை என்றும் குளிர்விப்பதற்கு ஒன்றும் இல்லாத நிலையில் அட்டை காகிதத்தால் விசிறி விடுவதாகவும் அந்தத் தாய் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு குறிப்பிட்டுள்ளார்.

இவர் போர் வெடித்த ஆரம்பத்திலேயே வடக்கு காசாவின் பெயித் ஹனூனில் இருந்து
இடம்பெயர்ந்து வந்தவராவார்.

‘எனது மகனின் உடல் முழுவதும் வெப்பத்தால் கொப்புழங்கள் நிரம்பி காணப்படுகின்றன.

முன்னர் என்றால் குளிப்பாட்டுவேன், ஆனால் அதற்கு நீர் வேண்டும். எனது கணவரின் சுகாதாரம் பற்றியும் கவலையாக உள்ளது.

தண்ணீரை சுமந்து வருவதால் அவரது உடல் எடை பாதியாக குறைந்துவிட்டது’ என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த வாரத்தில் காசாவில் வெப்பநிலை 30 பாகை செல்சியஸுக்கு மேல் அதிகரித்திருப்பதோடு அண்மைய ஆண்டுகளில் கோடை காலத்தில் அங்கு உயிராபத்துக் கொண்ட வெப்ப அலை பாதிப்பு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காசாவுக்கான பெரும்பான்மையான மின்சாரம் இஸ்ரேலில் இருந்து வழங்கப்படுவதோடு போர் ஆரம்பித்த விரைவில் அது துண்டிக்கப்பட்டது.

காசாவில் போர் நிறுத்தம் ஒன்றை எட்டுவதற்கான சர்வதேச முயற்சிகள் தோல்வி கண்டுவரும் நிலையில் கடந்த எட்டு மாதங்களுக்கு மேலாக இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை தற்போது 37,700ஐ தாண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )