இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் : இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது தென்னாபிரிக்க அணி
இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதி போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முதல் அணியாக தென்னாபிரிக்க தகுதி பெற்றுள்ளது.
இன்றைய தினம் பிரையன் லாரா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற முதலாவது அரையிறுதி போட்டியில் தென்னாபிரிக்க அணி ஆப்கானிஸ்தானை எதிர்கொண்டது.
குளிர்த்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.
அதற்கமைய, ஆப்கானிஸ்தான் அணி சார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய ரஹ்மானுல்லா குர்பாஸ் ஓட்டங்கள் எதுவும் பெறாமல் ஆட்டமிழக்க மறு முனையில் துடுப்பெடுத்தாடிய இப்ராஹிம் சத்ரான் 02 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து களமிறங்கிய ஏனைய வீரர்கள் அனைவரும் 10 ஓட்டங்களுக்குள் ஆட்டமிழக்க ஆப்கானிஸ்தான் அணி 11.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 56 ஓட்டங்களை பதிவு செய்தது.
ஆப்கானிஸ்தான் அணி சார்பில் , அதிகபட்சமாக அஸ்மத்துல்லா உமர்சாய் 10 ஓட்டங்களையும் குல்பாடின் நைப் 09 ஓட்டங்களையும்
ரஷித் கான் 08 ஓட்டங்களையும் பதிவு செய்தனர்.
தொடர்ந்து 57 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 8.5 ஓவர்கள் நிறைவில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை கடந்து இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
தென்னாபிரிக்க அணி சார்பில் ரீசா ஹென்ட்ரிக்ஸ் 29 ஓட்டங்களையும்
ஐடன் மார்க்ராம் 23 ஓட்டங்களையும் குயின்டன் டி காக் 05 ஓட்டங்களையும் பதிவு செய்தனர்.