வடக்கு, தெற்கு காசாவில் குண்டு மழை பொழியும் இஸ்ரேலியப் படை ;15 பேர் பலி
காசாவில் பல பகுதிகளிலும் இஸ்ரேலியப் படை நேற்றும் (26) தொடர்ந்து தாக்குதல்களை நடத்தியதோடு தெற்கு நகரான ரபாவில் இரவு தொடக்கம் கடும் மோதல்கள் இடம்பெற்று வந்ததாக அங்குள்ள குடியிருப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ரபாவின் மேற்கில் உள்ள டெல்அல் சுல்தான் பகுதியில் மோதல்கள் உக்கிரம் அடைந்திருந்ததாகவும் கடும் மோதல்களுக்கு மத்தியில் டாங்கிகள் வடக்கை நோக்கி முன்னேற முயன்றதாகவும் குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
டாங்கி எதிர்ப்பு ரொக்கெட்டுகள் மற்றும் மோட்டார் குண்டுகளைப் பயன்படுத்தி இஸ்ரேலியப்படை மீது தாக்குதல் நடத்தியதாக ஹமாஸ் ஆயுதப் பிரிவு மற்றும்
இஸ்லாமிய ஜிஹாத் போராளிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த மே ஆரம்பம் தொடக்கம் காசாவின் தென் முனைப்பகுதியான எகிப்து எல்லையை ஒட்டிய ரபா நகரிலேயே தரைவழி மோதல்கள் தீவிரம் அடைந்துள்ளன.
இங்கு காசா மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானவர்கள் அடைக்கலம் பெற்றிருந்த நிலையில் இஸ்ரேலின் படை நடவடிக்கையை அடுத்து பெரும்பாலான மக்கள் இங்கிருந்து மீண்டும் ஒருமுறை இடம்பெயர்ந்தனர்.
இஸ்ரேல் நேற்றுக் காலை நடத்திய ஏவுகணை தாக்குதல்களில் ரபாவில் இரு பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக மருத்துவ வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
ரபா மற்றும் எகிப்து எல்லைக்கு இடையே ஆயுதங்களை கடத்துவதுடன் தொடர்புபட்ட ஹமாஸ் போராளி ஒருவரை இஸ்ரேலியப்படை கொன்றதாக அந்த இராணுவம் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வடக்கு காசா நகரான பெயித்லஹியாவில் இஸ்ரேலிய வான்தாக்குதலில் வீடு ஒன்று தரைமட்டமாக்கப்பட்ட நிலையில் 15 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு மேலும் பலர் காயமடைந்ததாக மருத்துவ வட்டாரம் தெரிவித்தது.
அபூஅவாத் குடும்ப வீடே இதன்போது தாக்கப்பட்டுள்ளது.
தாக்குதல் இடம்பெறும்போது அந்த வீட்டில் சிறுவர்கள் மற்றும் பெண்கள் உட்பட சுமார் 40 பேர் இருந்ததாக காசாவின் மருத்துவ சேவைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இடிபாடுகளில் உயிர் தப்பியவர்களை மீட்கும் முயற்சியில் மீட்பாளர்கள் ஈடுபட்டு
வந்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
காசா நகரில் உள்ள எல்லைகள் அற்ற மருத்துவர் அமைப்பின்
சிகிச்சை நிலையம் ஒன்றுக்கு அருகில் இஸ்ரேல் நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் ஆறு பேர் கொல்லப்பட்டதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இதில் 33 வயதான உடல் சிகிச்சை நிபுணர் பாதி அல் வதியா மற்றும்
மூன்று சிறுவர்களும் கொல்லப்பட்டவர்களில் அடங்குகின்றனர்.
காசாவில் எந்த இடமும் பாதுகாப்பானதாக இல்லை என்று குறிப்பிட்டிருக்கும் மேற்படி பிரான்ஸைச் சேர்ந்த தொண்டு அமைப்பு, ‘இஸ்ரேலியப் படைகள் தொடர்ச்சியாக சுகாதார பணியாளர்கள் மற்றும் மருத்துவ வசதிகள் மீது தாக்குதல் நடத்தி வரும் நிலையில் உயிர்காக்கும் மனிதாபிமான உதவிகளை நாம் வழங்குவதை கிட்டத்தட்ட சாத்தியமற்றதாக்கி வருகிறது’ என்று தெரிவித்தது.
கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேல் மீதான பலஸ்தீன போராளிகளின் தாக்குதலைத் தொடர்ந்து வெடித்த காசா போரில் இதுவரை 37,718 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருப்பதாக காசா சுகாதாரஅமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இஸ்ரேலின் தாக்குதல்கள் குறுகிய காசா பகுதியை சின்னாபின்னமாக்கியுள்ளது.
போரை முடிவுக்குக் கொண்டுவரும் அமெரிக்கா ஆதரவான சர்வதேச போர் நிறுத்த முயற்சிகளும் தோல்வி கண்டு வருகின்றன.
எட்டப்படும் எந்த ஒரு உடன்படிக்கையும் போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று ஹமாஸ் உறுதியாக இருப்பதோடு தற்காலிக போர் நிறுத்தத்திற்கே
இணங்குவதாகக் குறிப்பிடும் இஸ்ரேல் ஹமாஸை ஒழிக்கும்வரை போர் தொடரும் என்று கூறி வருகிறது.
இஸ்ரேலின் முற்றுகைக்கு மத்தியில் வடக்கு காசாவில் உணவுப்பற்றாக்குறை மோசமடைந்திருப்பதோடு ஆயிரக்கணக்கான குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த ஒக்டோபர் 7 தொடக்கம் இதுவரை ஊட்டச்சத்து குறைபாட்டால் குறைந்து 30 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
‘இங்கே மாவு மற்றும் பொதியிடப்பட்ட உணவுகள் மாத்திரமே இருக்கின்றன. மரக்கறிகள்,இறைச்சி மற்றும் பால் எதுவும் இல்லை. எனது இடையில் நான்
25 கிலோ குறைந்துவிட்டேன்’ என்று காசா நகரில் தனது குடும்பத்துடன் வசிக்கும் அபூ முஸ்தபா ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்குத் தெரிவித்துள்ளார்.
காசாவின் ஜபலியா அகதிமுகாமின் உதவி விநியோகிக்கும் இடத்திற்கு முன்னால் பலர் வரிசையில் காத்திருக்கும் காட்சிகள் இணையதளத்தில் வெளியாகி இருப்பதோடு அது அல் ஜசீரா செய்தி நிறுவனத்தால் உறுதி செய்யப்பட்டுள்ளது.
சொற்ப அளவான உணவுக்காக மூன்று மணி நேரத்திற்கு மேல் காத்திருப்பதாக வரிசையில் இருக்கும் குடியிருப்பாளர்கள் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அந்த உணவு வீட்டில் காத்திருக்கும் 15 பேருக்கும் போதுமானதாக இல்லை என்றும் அவர்
குறிப்பிட்டார்.
வடக்கு காசாவில் சந்திக்கும் வேதனைகள் மன்னிக்க முடியாதவை’ என்று அந்த வரிசையில்காத்திருக்கும் மற்றொருவர் குறிப்பிட்டுள்ளார்.
1948 போர் தொடக்கம் இவ்வாறான ஒரு பஞ்சத்தை சந்தித்ததில்லை.
இந்த சாதாரணமான உதவி திட்டங்கள் கூட இல்லாவிட்டால் பட்டினியால் நாம்
உயிரிழப்போம்’ என்று அவர் கூறினார்.
இதேவேளை இஸ்ரேலின் லெபனான் எல்லையில் ஹிஸ்புல்லா அமைப்புடனான மோதல் அதிகரித்திருக்கும் சூழலில் அது முழு அளவில் போராக வெடிக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பில் அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
‘இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா இடையிலான மற்றொரு போர் மத்திய கிழக்கில் பயங்கர விளைவுகளை ஏற்படுத்துவதுடன் இலகுவாக பிராந்திய போர் ஒன்றாக
மாறிவிடும்’ என்று அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் லொயிட் ஒஸ்டின், அமெரிக்கா சென்றிருக்கும் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோவ் கல்லன்டிடம் தெரிவித்துள்ளார்.
‘பதற்றம் அதிகரிப்பதை தடுப்பதற்கு இராஜதந்திரமே சிறந்த வழி’ என்றும் ஒஸ்டின் குறிப்பிட்டுள்ளார்.
எல்லை பதற்றத்தை இராஜதந்திர வழி ஒன்றில் தீர்ப்பது குறித்து இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உட்பட அமெரிக்க அதிகாரிகள் கூறி வருவதோடு அனைத்து சாத்தியமாக நிலைகளுக்கும் இஸ்ரேல் தயாராக உள்ளது என்று கல்லன்ட் தெரிவித்
தார்.