தமிழ் சினிமா வசூல் நாயகன் .. இளைஞர்களின் தளபதி.. நடிகர் விஜயின் பிறந்தநாள் இன்று !
தமிழ் சினிமாவின் உச்சபட்ச நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் விஜய்.
காதல் நாயகனாக தொடங்கி தற்போது கமர்ஷியல் நாயகனாக வலம் வரும் நடிகர் விஜய்க்கு இன்று 50-வது பிறந்தநாள்.
அதிலும் குறிப்பாக அதிகாரப்பூர்வமாக தமிழக வெற்றிக் கழகம் எனும் பெயரில் அரசியல் கட்சியை ஆரம்பித்த பின்னர் கொண்டாடும் முதல் பிறந்தநாள் இதுவாகும்.
நடிகர் விஜய் 1974-ம் ஆண்டு ஜூன் 22-ம் திகதி பிறந்தார் .
பொதுவாக ஒரு குழந்தைக்கு தன் தந்தைதான ஹீரோவாக இருக்கும். ஆனால் விஜய்யை திரைப் பயணத்தில், ஹீரோவாக செதுக்கினார் அவரது தந்தையான எஸ்.ஏ.சந்திரசேகர்.
தற்போது குழந்தைகளும் கொண்டாடும் நட்சத்திரமாக விளங்கும் நடிகர் விஜய் குழந்தை நட்சத்திரமாக வெற்றி, குடும்பம், வசந்த ராகம், நான் சிகப்பு மனிதன், சட்டம் ஒரு விளையாட்டு போன்ற படங்களில் நடித்துள்ளார்.
அவரை தனது படங்களில் நடிக்க வைத்து அழகு பார்த்தார் எஸ்.ஏ.சந்திரசேகர். இப்படித்தான் தளபதி விஜய்யின் திரைப் பயணம் தொடங்கியது.
இதனைத் தொடர்ந்து 1992-ம் ஆண்டு “நாளைய தீர்ப்பு” என்ற திரைப்படத்தின் மூலம் விஜய்யை முதன்முதலாக ஹீரோவாக அறிமுகப்படுத்தினார் எஸ்.ஏ. சந்திரசேகர்.
.
இதனைத் தொடர்ந்து எஸ்.ஏ.சி. இயக்கத்தில் விஜயகாந்த், விஜய் நடிப்பில் வெளியான “செந்தூரப்பாண்டி” திரைப்படம், எதிர்பார்த்தபடி விஜய்யை பிரபலமாக்கியது.
விஜய் என்ற நடிகனை தமிழ் ரசிகர்கள் அனைவரின் கவனத்திற்கும் கொண்டு சென்றது.
வெறுமனே தந்தையில் கதகதப்பில் வளர்ந்து நடிகனாவதை விட தனித் திறமைகளின் மூலம் நடிகனாக நிலைக்க வேண்டும் என்று எண்ணிய விஜய் நடிப்பு. நடனம், பாடல், நகைச்சுவை. ரொமேன்ஸ், ஆக்சன் என்று கமர்ஷியல் ஹீரோவுக்குத் தேவையான அத்தனை விஷயங்களையும் படிப்படியாகக் கற்றுக்கொண்டு மெறுகேறினார்.
1994-ம் ஆண்டு தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான ‘ரசிகன்’ படத்தில் தான் விஜய்யின் பெயருக்கு முன்னால் “இளைய தளபதி” பட்டம் முதன்முதலில் சூட்டப்பட்டது.
விஜய்யின் சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த முதல் படம் என்றால் அது பூவே உனக்காக திரைப்படம் தான்.
ஒருதலை காதல் பற்றி பேசிய இந்த படம் 1996-ல் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது.
குறிப்பாக பூவே உனக்காக கிளைமாக்ஸ் காட்சியில் விஜய் பேசும் வசனம் தற்போதும் கூட பலரால் ரசிக்கப்படக்கூடிய காட்சியாக இருந்து வருகிறது. ‘காதல் என்பது பூ மாதிரி, ஒருதடவ பூ உதிர்ந்தால் மறுபடியும் எடுத்து ஒட்டவைக்க முடியாது’ என விஜய் பேசிய வசனத்தை இன்றும் நினைவு கூறாத விஜய் ரசிகர்கள் யாரும் இருக்க முடியாது .
43வயது வரை இளைய தளபதி என அழைக்கப்பட்ட விஜய் 2017 ஆம் ஆண்டில் இயக்குனர் அட்லீ அடைமொழியை தளபதி என்று மாற்ற முடிவு செய்தார்.
மெர்சல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான போது, அதில்தான் முதன்முதலாக தளபதி என்று அழைக்கப்பட்டார்.
அவரது ரசிகர்கள் இந்த மாற்றத்தைக் கண்டு மகிழ்ச்சியடைந்து திருவிழா போல் கொண்டாடினர்.
மெர்சல் படத்தில் நேரடியாக அரசியல் பேசிய விஜய் அதன்பிறகு வெளியான தெறி, சர்கார் போன்ற படங்களிலும் பல அரசியல் கருத்துகளைப் பேசி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.
அதே போல “என் நெஞ்சில் குடியிருக்கும்..” என தனது ரசிகர்கள் மத்தியில் பேசும் விஜய் அவ்வபோது அரசியல் கலந்த குட்டிக் கதைகளை சொல்ல ஆரம்பித்தார்.
இதனைத் தொடர்ந்து விஜய் மக்கள் இயக்கம் மூலமாக நேரடியாக சமூக பணிகளில் ஈடுபடத் தொடங்கினார்.
அதேபோல தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் வீட்டிற்கு நேரில் சென்று உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தது, நீட் தேர்வால் உயிரை மாய்த்துக் கொண்ட அனிதாவின் வீட்டிற்கு நேரில் சந்தித்தது, ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்டது என விஜய் அரசியல் ரீதியாக கவனம் ஏற்படுத்தினார்.
இந்த நிலையில்தான் சமீபத்தில் “தமிழக வெற்றிக் கழகம்” என்று தனது கட்சியின் பெயரை விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
2024ஆம் ஆண்டு கட்சி ஆரம்பித்த போது மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்து 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை கவனம் செலுத்துவதாக அறிவித்தார்.
அதுமட்டுமல்லாமல், தீவிர அரசியலில் கவனம் செலுத்த உள்ளதால் சினிமாவுக்கு முழு விலக்கு போட உள்ளதாகவும் அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார் விஜய்.