கள்ளச்சாராயத்தால் சுடுகாடான கருணாபுரம் : பலி எண்ணிக்கை 49 ஆக உயர்வு !
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 49 ஆக அதிகரித்துள்ளது .
கள்ளக்குறிச்சி – கருணாபுரம் பகுதியில் நேற்று முந்தினம் (19) விற்பனை செய்யப்பட்ட சட்டவிரோத மதுபானத்தினை அருந்தியவர்கள் வாந்தி, வயிற்று வலி, வயிற்றெரிச்சல் போன்ற பிரச்சினைகளால் திடீரென பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து பலர் கள்ளக்குறிச்சி அரச மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதில் தற்போது 49 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் உயிரிழந்த அனைவரும் சட்டவிரோத மதுபானம் அருந்தியமை தெரியவந்துள்ளது.
வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருபவர்களில் பலர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும், இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் எனவும் தெரியவந்துள்ளது.
மேலும் , கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்ததாக கன்னுக்குட்டி என்ற கோவிந்தராஜ், அவரது தம்பி தாமோதரன் ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர். இருவரிடம் கள்ளக்குறிச்சி பொலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேவேளை , கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சமும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும், கள்ளக்குறிச்சியில் நடந்துள்ள இந்த சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தி, இவ்வாறு நிகழ்ந்ததற்கான அனைத்து காரணிகளை கண்டறியவும், எதிர்வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் தமிழகத்தில் மீண்டும் நடைபெறாமல் இருக்க, மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு ஆலோசனை வழங்கவும் உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.கோகுல்தாஸ் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைக்க உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.