இலங்கை தொடர்பில் மற்றுமொரு அறிக்கை ஜெனீவாவில் சமர்பிப்பு
ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமைகள் பேரவையின் 56 ஆவது அமர்வில் இலங்கைத் தொடர்பான அறிக்கை ஒன்றை கனடா, மலாவி, மொண்டெனேகுரோ, வடக்கு மாசிடோனியா, ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் முன்வைத்துள்ளன.
குறித்த அறிக்கையில், இலங்கை அரசாங்கம் வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், வலிந்து காணாமல் ஆக்கப்படுதலால் ஏற்படும் துன்பங்கள் மற்றும் அனைத்து சமூகங்கள் மீதான அதன் தாக்கத்தையும் நிவர்த்தி செய்வதற்கு இலங்கை அரசாங்கம் மனித உரிமைகள் பேரவையின் பரிந்துரைகளைச் செயற்படுத்த வேண்டும் எனவும் அதில் கோரப்பட்டுள்ளது.
இந்நிலையில், மனித உரிமைகள் ஆணையரின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாக சம்பந்தப்பட்ட நாடுகளின் குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பயங்கரவாதத்தை ஒடுக்குதல் மற்றும் இணையப் பாதுகாப்பு தொடர்பாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய சட்டங்கள் அனைவரின் கருத்துச் சுதந்திரம் மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் தயாரிக்கப்பட வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதேநேரம், யாழ்ப்பாணத்தில் உயர் பாதுகாப்பு வலயத்திலிருந்து காணிகள் விடுவிக்கப்படுவது வரவேற்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் காணி அபகரிப்பு தொடர்பான பதற்றங்கள், தன்னிச்சையான கைதுகள், ஒழுங்கற்ற தேடுதல்கள் மற்றும் தடுப்புக்காவலின் போது மோசமான முறையில் நடத்தப்படல் போன்ற நிலைமைகள் குறித்து கரிசனைக் கொள்ள வேண்டியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.