விவாகரத்துக்கு காரணமான ஆப்பிள் நிறுவனத்திடம் நஷ்ட ஈடு கேட்ட தொழிலதிபர்
தனது மனைவி விவாகரத்து கோருவதற்கு ஆப்பிள் நிறுவனம்தான் காரணம் என்று கூறி தொழிலதிபர் ஒருவர் வழக்கு தொடுத்துள்ள சம்பவம் இங்கிலாந்தில் பதிவாகியுள்ளது.
தமது ஐஃபோன் ( I PHONE ) வழியாக பாலியல் தொழிலாளர்களுக்குக் குறுந்தகவல் அனுப்பி, சந்திப்புகளுக்கு ஏற்பாடு செய்து வந்த அந்த அவர், குறுந்தகவல்கள் அனைத்தையும் கைப்பேசியிலிருந்து நீக்கிவிட்டார். ஆனால், அவரது ஐஃபோனுடன் இணைக்கப்பட்ட ஐமேக் கணினியில் அந்த நீக்கப்பட்ட குறுந்தகவல்கள் இருந்துள்ளது.
குடும்பத்தில் அனைவரும் பயன்படுத்தும் அந்த ஐமேக்கில் செயலி ஒன்றை இயக்கிய ரிச்சர்ட் மனைவி, தம் கணவர் கடைசியாக ஒரு பாலியல் தொழிலாளருக்குக் குறுந்தகவல் அனுப்பி இருந்ததைக் கண்டுபிடித்துள்ளார். மேலும், அவர் ஆழமாக ஆராய்ந்ததில் பல ஆண்டுகளாகத் தனது கணவர் அனுப்பி, பின்னர் நீக்கிய குறுந்தகவல்கள் அனைத்தையும் பார்த்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ரிச்சர்ட் மனைவி விவாகரத்து கோரியுள்ளார்.
இந்நிலையில் அந்த தொழிலதிபர், ஆப்பிள் நிறுவனத்திற்கு எதிராக வழக்குப்பதிவு செய்துள்ளார். ஒரு ஐஃபோனிலிருந்து நீக்கப்படும் குறுந்தகவல்கள், அதனுடன் இணைக்கப்பட்டுள்ள மற்ற ஆப்பிள் சாதனங்களில் தொடர்ந்து இருக்கலாம் என்பதை நிறுவனம் தன் வாடிக்கையாளர்களுக்குத் தெளிவுபடுத்தவில்லை என்பது இவரது வாதம். ஆதலால் அவர் சுமார் 5 மில்லியன் பவுண்ட் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார்.