“சித்திரையில் குழந்தை பிறந்ததால் கொன்றேன்”
சித்திரையில் குழந்தை பிறந்ததால் குடும்பத்துக்கு ஆபத்து என சிலர் கூறியதால், பச்சிளம் குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்துக் கொன்றதாக குழந்தையின் தாத்தா கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் இந்தியாவில் பதிவாகியுள்ளது.
அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த வீரமுத்து – ரேவதி தம்பதியின் மகள் சங்கீதா. இவரது கணவர் பாலமுருகன். கடந்த மாதம் சங்கீதாவிற்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு சாத்விக் என்று பெயரிட்டனர். இதையடுத்து சங்கீதா குழந்தையுடன் உட்கோட்டையில் உள்ள பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார்.
கடந்த 14-ந்திகதி அதிகாலை தனது குழந்தைக்கு பால் கொடுத்து தூங்க வைத்துவிட்டு, சங்கீதாவும் தூங்கிவிட்டார். காலையில் எழுந்து பார்த்தபோது, வீட்டுக்கு பின்புறம் இருந்த தண்ணீர் பேரலில் குழந்தை இறந்து கிடந்தது.
இதுகுறித்து குழந்தையின் தாத்தா வீரமுத்து மீது சந்தேகம் ஏற்பட்டதையடுத்து, தனி இடத்தில் வைத்து அவரிடம் பொலிஸார் விசாரணை நடத்தினர்.
இதில், பிறந்து 38 நாட்களே ஆன அந்த குழந்தையை கொலை செய்தது அவர்தான் என்ற திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. “சித்திரையில் பிறந்ததால் குடும்பத்திற்கு ஆகாது என்று கொன்றேன்” என்று அவர் பொலிஸாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.இதையடுத்து வீரமுத்துவை கைது செய்தனர்.