“என்ன நடக்கும் என்று பொறுத்திருந்து பார்ப்போம்”
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்னவின் கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம், பாராளுமன்ற உறுப்பினர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகருடன் இணைந்து திட்டமிட்டு நடத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் 17, 2023 அன்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்னவின் கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. துப்பாக்கிச் சூட்டில் காரின் பின் பக்க கண்ணாடி சேதமடைந்தது, ஆனால் பாராளுமன்ற உறுப்பினர் காயம் ஏற்படவில்லை.
இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டுள்ளதாகவும், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பாராளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்னவிடம் வினவியபோது, “எனது வாகனத்தின் மீது துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டது. பொலிஸில் முறைப்பாடு அளித்ததும் நான் தான். இதுவரைக்கும் என்ன நடந்தது என்று தெளிவாகத் தெரியவில்லை. இறுதித் தீர்மானம் என்னவென்று தெரியவில்லை. நானும் அதையே எதிர்பார்த்து இருக்கிறேன். பார்த்துக்கலாம் என்ன நடக்கும் என்று ” என தெரிவித்திருந்தார்.