கணினி கல்வியறிவு அதிகரிப்பு
நாட்டில் கணினி அறிவாற்றல் 39 வீதமாக அதிகரித்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களம் தெரிவித்துள்ளது.
2023 ஆம் ஆண்டு கணினி கல்வியறிவு கணக்கெடுப்பு அறிக்கையின்படி, இலங்கையில் 05 முதல் 69 வயதுக்கு இடைப்பட்ட ஐந்தில் இருவர் கணினி அறிவு பெற்றவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஐந்தில் மூன்று பேருக்கு டிஜிட்டல் கல்வியறிவு உள்ள நிலையில், அது 63.5 சதவீதமாகும் என மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் 20.2 வீதமான குடும்பங்கள் டெஸ்க்டாப் அல்லது மடிக்கணினிகளைப் பயன்படுத்துகின்ற நிலையில், நகர்ப்புற மக்களின் கணினி மற்றும் டிஜிட்டல் கல்வியறிவில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2023 ஆம் ஆண்டளவில், கணினி கல்வியறிவு 4.7 சதவிகிதம் அதிகரித்துள்ள நிலையில், நகர்ப்புறங்களில் அதிகபட்ச கணினி கல்வியறிவு 52.9 சதவிகிதம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேல்மாகாணம் அதிக கணினி அறிவைப் பெற்றுள்ள அதேவேளை கிழக்கு மாகாணம் மிகக் குறைந்த கணினி அறிவைக் கொண்டுள்ளதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.