மூன்றாவது முறையாக பிரதமரானார் நரேந்திர மோடி !
தொடர்ந்தும் 3 ஆவது முறையாக இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றுள்ளார்.
குறித்த பதவியேற்பின் ஊடாக தொடர்ந்தும் மூன்று முறை பிரதமரான முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் சாதனையை நரேந்திர மோடி சமன் செய்துள்ளார்.
இந்த பதவியேற்பு நிகழ்வில் தெற்காசியா மற்றும் இந்து சமுத்திரப் பிராந்தியத்தைச் சேர்ந்த ஏழு நாடுகளின் தலைவர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டுள்ளனர்.
அண்மையில் நடைபெற்ற 18ஆவது மக்களவைத் தேர்தலில் 543 தொகுதிகளில் பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைத் தக்கவைத்தது.
இதில் பாரதீய ஜனதா கட்சி 240 ஆசனங்களை பெற்றது.
எனினும் ஆட்சியமைக்க தேவையான 272 ஆசனங்களை தனிப்பெரும்பான்மை ஊடாக பெறுவதற்கு தவறியமையினால் தெலுங்கு தேசம் கட்சி மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியுடனும் கூட்டணியமைத்து பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியமைக்கின்றது.