பலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்த சுலோவேனியா

பலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்த சுலோவேனியா

ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிக்கும் ஸ்பெயின், நார்வே, அயர்லாந்து ஆகிய நாடுகள் பலஸ்தீனத்தை தனிநாடாக சமீபத்தில் அங்கீகரித்தன. இதற்கு இஸ்ரேல் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

இந் நிலையில் பலஸ்தீனத்தை தனிநாடாக மற்றொரு ஐரோப்பிய நாடான சுலோவேனியா அங்கீகாரம் அளித்துள்ளது. பலஸ்தீனத்தை ஒரு சுதந்திர மற்றும் இறையாண்மை கொண்ட நாடாக அங்கீகரிக்க சுலோவேனியா அரசாங்கம் முடிவு செய்தது. இதற்கு அந்நாட்டு பாராளுமன்றத்தில் ஒப்புதல் பெறப்பட்டது. பலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிக்க நடத்திய வாக்கெடுப்பு வெற்றி பெற்றது.

இதுகுறித்து சுலோவேனியா பிரதமர் ராபர்ட் கோலோப் கூறும்போது, “இன்றைய பலஸ்தீனத்தை ஒரு இறையாண்மை மற்றும் சுதந்திர நாடாக அங்கீகரிப்பது மேற்குக் கரை மற்றும் காசாவில் உள்ள பாலஸ்தீன மக்களுக்கு நம்பிக்கையை அளிக்கிறது” என தெரிவித்துள்ளார்.

இந்த வாக்கெடுப்புக்கு எதிர்க்கட்சியான ஸ்லோவேனியன் ஜனநாயகக் கட்சி ஆட்சேபனை தெரிவித்து இருந்தது. சுதந்திர பலஸ்தீன அரசை அங்கீகரிப்பதற்கு இது சரியான நேரம் அல்ல என்றும், இந்த நடவடிக்கை ஹமாஸ் அமைப்புக்கு மட்டுமே பலன் அளிக்கும் என்றும் தெரிவித்து இருந்தது. இதனால் அக்கட்சி வாக்கெடுப்பை புறக்கணித்தது.

ஏற்கனவே ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 உறுப்பினர்களில் சுவீடன், சைப்ரஸ், ஹங்கேரி, செக் குடியரசு, போலந்து, ஸ்லோவாக்கியா, ருமேனியா, பல்கேரியா ஆகிய நாடுகள் பலஸ்தீன அரசை அங்கீகரித்துள்ளன. இதே போல் மால்டா நாடும் அதை விரைவில் பின்பற்றலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )