காசா மீதான இஸ்ரேல் தாக்குதலுக்கு ஐ.நா. கடும் கண்டனம்
இஸ்ரேல்-காசா இடையே கடந்த ஒக்டோபர் 7-ந் திகதி போர் தொடங்கியது. 7 மாதங்களுக்கும் மேலாக இந்த போர் நடைபெற்று வருகிறது. இந்த போரை நிறுத்தும்படி உலக நாடுகள் பலவும் வலியுறுத்தி வருகின்றன. எனினும் போர் முடிவுக்கு வந்தபாடில்லை. இதற்கிடையே கடந்த மாதம் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் இராணுவ வீரர்கள் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனையடுத்து காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் மேலும் தீவிரப்படுத்தியது.
அதன் ஒருபகுதியாக ரபா நகரை முற்றுகையிட்ட இஸ்ரேல் இராணுவம் அங்கு பதுங்கி இருக்கும் ஹமாஸ் அமைப்பினர் முழுவதும் அழிக்கப்படும் வரை தாக்குதல் தொடரும் என அறிவித்தது. அதன்படி காசாவின் ரபா நகரில் இஸ்ரேல் இராணுவம் நேற்று (27) சரமாரி ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலில் 45 பேர் கொல்லப்பட்டதாகவும், 249 பேர் காயமடைந்ததாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் தாக்குதலில் 45 பேர் கொல்லப்பட்டதற்கு கடுமையான கண்டனத்தை ஐ.நா பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் “இந்த கொடூர மோதலில் இருந்து தங்களை காத்துக் கொள்ளும் வகையில் தஞ்சம் புகுந்த அப்பாவி மக்களின் உயிரை பலி வாங்கிய இஸ்ரேலின் இந்த தாக்குதல் நடவடிக்கையை நான் கடுமையாக கண்டிக்கிறேன். காசாவில் பாதுகாப்பான இடம் ஏதும் இல்லை. இந்தக் கொடூரம் நிறுத்தப்பட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.