மேல் மாகாணத்தைப் போன்று உயர்தர சுகாதார சேவைகளை கொண்ட மாகாணமாக வடமாகாணம் மேம்படுத்தப்படும்

மேல் மாகாணத்தைப் போன்று உயர்தர சுகாதார சேவைகளை கொண்ட மாகாணமாக வடமாகாணம் மேம்படுத்தப்படும்

2017ஆம் ஆண்டு பிரதமராக இருந்த போது வடமாகாண சுகாதார சேவையை மேம்படுத்தவதற்காக தன்னால் ஆரம்பிக்கப்பட்ட திட்டங்களை நாட்டின் ஜனாதிபதி என்ற வகையில் இன்று மக்களிடம் கையளிக்க முடிந்திருப்பது குறித்து மகிழ்ச்சியடைவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

நவீன வைத்தியசாலைகளுடன் கூடிய சுகாதார வசதிகளை வடக்கு மாகாணம் பெற்றுள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, மேல் மாகாணத்தைப் போன்று மேம்பட்ட சுகாதார சேவைகளைக் கொண்ட மாகாணமாக வடக்கின் சுகாதார சேவையை அபிவிருத்தி செய்வதே தமது நோக்கமாகும் எனவும் தெரிவித்தார்.

மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் வைத்திய புனர்வாழ்வு சிகிச்சை மற்றும் மனநல அபிவிருத்தி நிலையத்தை நேற்று (26) திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

நெதர்லாந்து அரசாங்கத்தின் ஆதரவுடன் 4500 மில்லியன் ரூபா செலவில் இந்த மருத்துவ சிகிச்சை நிலையம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இது வட மாகாணத்தில் உள்ள மிகப் பெரிய மருத்துவ புனர்வாழ்வு சிகிச்சை மற்றும் மனநல அபிவிருத்தி நிலையம் என்பதோடு மனநல மறுவாழ்வுப் பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சைப் பிரிவு, ஆய்வுகூடம், கதிரியக்கப் பிரிவு, வெளிநோயாளர் பிரிவு மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

நெதர்லாந்துத் தூதுவர் பொனி ஹோபேக் அவர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நினைவுப் பரிசையும் வழங்கி வைத்தார்.

மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியதாவது,

இந்த மருத்துவப் பிரிவை இன்று திறந்து வைக்கும் போது இதன் பின்னணியைக் குறிப்பிட வேண்டும். 2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த பின்னர், யுத்தம் காரணமாக வடமாகாணத்தில் தடைப்பட்ட சேவைகளை மீளமைப்பதற்கான அடிப்படைப் பணிகளை அப்போதைய அரசாங்கம் ஆரம்பித்தது.

முதல் கட்டப் பணிகள் நிறைவடைந்த நிலையில், இந்தப் பிரிவுகள் அனைத்தின் முன்னேற்றத்துக்கு, இரண்டாம் கட்டத்தை அமுல்படுத்த வேண்டியது அவசியமாகும். அதற்கிணங்க, வடமாகாணத்தில் சுகாதாரத் துறையின் மேம்பாட்டிற்காக புதிய மருத்துவப் பிரிவுகளை நிறுவுவதற்கு பிரதமர் என்ற ரீதியில் நெதர்லாந்து அரசாங்கத்துடன் கலந்துரையாடினேன். அப்போது வடமாகாண சபையில் இருந்த சுகாதார அமைச்சரும், முன்னாள் முதலமைச்சரும் இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.

யுத்தத்திற்கு முன்னர், கொழும்புக்கு அடுத்தபடியாக சிறந்த சுகாதார சேவையைக் கொண்ட பிரதேசமாக யாழ்ப்பாணம் திகழ்ந்தது. மேல்மாகாணம் அபிவிருத்தியடைந்த நிலையில் தென் மாகாணமும் மத்திய மாகாணமும் அபிவிருத்தியடைந்தன.

வடக்கு மாகாணத்தை மீண்டும் அந்த நிலைக்கு கொண்டு வருவதே எனது நோக்கமாகும். அதனால்தான் இந்த மருத்துவமனைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டு மேம்படுத்தப்படுகிறது.

அத்துடன், 2017ஆம் ஆண்டு யாழ்.பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தை நிறுவுவதற்கும், அதற்கு தேவையான கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கும் நான் பிரதமராக இருந்து பணத்தை ஒதுக்கினேன். இன்று இந்த திறப்பு விழாவில் கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஜனாதிபதியாகப் பதவியேற்றவுடன் இந்தப் பணிகள் உடனடியாக நிறைவு செய்ய வேண்டும் என்று பணித்தேன். இப்போது வடக்கு மாகாணத்தில் நவீன மருத்துவமனைகள் உள்ளன.

யாழ்ப்பாண வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக மாற்ற தீர்மானித்தோம். மேலும் மன்னார் வைத்தியசாலையை அபிவிருத்தி செய்யப்படும் அதே வேளை வவுனியா வைத்தியசாலையை போதனா வைத்தியசாலையாக மாற்றுவதுடன் வவுனியா பல்கலைக்கழகத்திற்கு மருத்துவ பீடமொன்று வழங்கப்படும். ராகம வைத்தியசாலைக்குப் பிறகு இந்த நவீன இயந்திரங்களைக் கொண்ட ஒரே வைத்தியசாலை மாங்குளம் வைத்தியசாலை என்பது குறிப்பிடத் தக்கது.

யுத்தம் காரணமாக அங்கவீனமடைந்தவர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ராகம வைத்தியசாலை ஸ்தாபிக்கப்பட்டது. போரினால் பாதிக்கப்பட்ட இப்பிரதேச மக்களுக்கு ராகம வைத்தியசாலை போன்ற நவீன வைத்தியசாலையை வழங்குவதற்கு நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

வடமாகாணத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 04 வைத்தியசாலை பிரிவுகளில் உள்ள உபகரணங்கள் இலங்கையில் உள்ள பல வைத்தியசாலைகளில் இல்லை.

இந்த சாதனங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அதற்கு மருத்துவமனை நிர்வாகமும், மருத்துவமனை முகாமைத்துவமும் முயற்சி எடுக்க வேண்டும். மருத்துவமனை நிர்வாகம் மற்றும் முகாமைத்துவத்தின் சிறப்பான நிலை காரணமாக கியூபா சுகாதார சேவைகளில் முன்னணியில் உள்ளது. எனவே, மருத்துவமனை நிர்வாகத்தையும் முகாமைத்துவத்தையும் உயர் நிலைக்கு கொண்டு வர பாடுபட வேண்டும்.

அதற்கு, உலக சுகாதார நிறுவனம் மற்றும் ஆசிய அபிவிருத்தி நிதியத்தில் இருந்தும் நிதி ஒதுக்கீடு பெறலாம். இந்தச் செயற்பாடுகள் அனைத்தினூடாகவும் நாட்டில் நம்பிக்கையான சுகாதார சேவையை ஏற்படுத்த எதிர்பார்க்கின்றோம் என்பதையும் கூற வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான்,

நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதிஉதவியுடன் நான்காயிரத்து ஐநூறு மில்லியன் ரூபா செலவில் மாங்குளம் வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மருத்துவ புனர்வாழ்வு சிகிச்சை மற்றும் மனநல அபிவிருத்தி நிலையம் இப்பிரதேச மக்களின் சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்கு பெரும் உதவியாக உள்ளது.

போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இவ்வாறான வசதிகளை வழங்கி சேவையாற்றிய நெதர்லாந்து அரசாங்கத்திற்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
நாடு பல சவால்களை எதிர்நோக்கியிருந்த வேளையில் ஜனாதிபதி அச்சமின்றி முன் வந்து அந்த சவால்களில் இருந்து நாட்டை விடுவிப்பதற்காக நாட்டைக் பொறுப்பேற்றார். இந்த நாடு அப்போது இருந்த நிலையை மக்கள் மறக்கவில்லை என்று நான் நம்புகிறேன். அந்த நிலையிலிருந்து நாட்டை விடுவிப்பதற்காக ஜனாதிபதி தன்னை அர்ப்பணித்தார். அதன் பலனை இந்நாட்டு மக்கள் இன்று அனுபவித்து வருகின்றனர்.

வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ்,

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வடமாகாணத்தில் செலவிடும் மூன்றாவது நாள் இன்று. இந்த மூன்று நாட்களாக வடமாகாணத்திற்கு விஜயம் செய்து மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை நேரில் கண்டு அவற்றுக்கான தீர்வுகளை பெற்றுக்கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டமைக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.

இன்று அவரால் திறந்து வைக்கப்படும் இந்த மருத்துவ மறுவாழ்வு சிகிச்சை மற்றும் மனநல மேம்பாட்டு மையம் ‘டிரைவ்’ திட்டத்தின் கீழ் திறக்கப்படும் மூன்றாவது மருத்துவமனையாகும். வடமாகாண சுகாதார சேவையில் இது ஒரு மைல் கல்லாக மாறும் என்பது உறுதி. ஜனாதிபதியின் ஆர்வம், அர்ப்பணிப்பு மற்றும் ஊக்கம் காரணமாக இந்த திட்டம் யதார்த்தமாகிறது. 2016 ஆம் ஆண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதமராக இருந்த போது வடமாகாணத்திற்கு இத்திட்டத்தை பெற்றுக் கொடுத்திருந்தார்.

இன்று மாங்குளம் வைத்தியசாலையில் திறந்துவைக்கப்பட்ட மருத்துவ புனர்வாழ்வு சிகிச்சை மற்றும் மனநல அபிவிருத்தி நிலையத்தை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுத்தமைக்காக ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பதுடன் அதன் மூலம் அவர் சுகாதாரத்துறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியுள்ளார். சுகாதாரத் துறை மாத்திரமின்றி அனைத்து துறைகள் தொடர்பாகவும் ஜனாதிபதி கவனம் செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பாராளுமன்ற உறுப்பினர் எஸ். நோகராதலிங்கம்,

இந்தப் பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் போதிய வசதிகள் இல்லை. இன்று இந்த மருத்துவ புனர்வாழ்வு சிகிச்சை மற்றும் மனநல அபிவிருத்தி நிலையத்தை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுத்தமைக்காக ஜனாதிபதிக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், எனைய மருத்துவமனைகளுக்கும் தேவையான வசதிகளை செய்து கொடுத்தால், இப்பகுதி மக்கள் முழுமையாக பயன்பெறுவார்கள். இது தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு அறிவிப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்,

இந்தப் பிரிவு இந்த வன்னி மாவட்டத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதமமாகும். இதற்காக முயற்சித்த அனைவருக்கும், குறிப்பாக எமது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். வட மாகாணத்துக்கே ஒரு பெரும் வளமாக இதனைப் பெற்றிருக்கின்றோம். இந்த வளம் தொடர்ச்சியாக பேணப்பட வேண்டும். அதற்கு நாம் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இந்த வைத்தியசாலை மிகச் சிறப்பாக நடைபெற அவசியமான அனைத்து வளங்களையும் நீங்கள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஜனாதிபதியிடம் நான் முன்வைக்கிறேன்.

பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் மாகாண மக்கள் பிரதிநிதிகள் மற்றும் இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் பொனி ஹோபேக் மற்றும் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )