இராமநாதன் அர்ச்சுனாவின் சமூக ஊடக கணக்குகள் ஆராயப்படும் – சபாநாயகர்
யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் சமூக ஊடக கணக்குகள் ஆய்வு செய்யப்படும் எனச் சபாநாயகர் கலாநிதி அசோக ரன்வல தெரிவித்துள்ளார்.
அத்துடன், அவரது கருத்து தொடர்பில் முறையான விசாரணை நடத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அஸ்கிரி மற்றும் மல்வத்து மகாநாயக்கர்களை நேற்று (24) சந்தித்ததன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
‘நாடாளுமன்றத்தில் சர்ச்சைக்குரிய சம்பவம் இடம்பெற்றபோது சபாநாயகர் ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கவில்லை.
எனவே, அது குறித்து கருத்து தெரிவிப்பதற்கு முடியாது.
குறித்த சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகளின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் சக நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இது தொடர்பில் கலந்துரையாடப்படும்
இராமநாதன் அர்ச்சுனா கூறிய ஈழம் தொடர்பான கருத்து சத்தியப்பிரமாணத்துடன் முரண்படுவதாக உள்ளது.
எவ்வாறாயினும், சத்தியப் பிரமாணம் செய்வதற்கு முன்னரே தாம் ஈழம் தொடர்பான கருத்துகளை முன்வைத்ததாக இராமநாதன் அர்ச்சுனா கூறுகிறார்.
எனவே, அவரது சமூக ஊடக கணக்குகள் ஆராயப்பட்டு அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானிக்கப்படும்’ எனச் சபாநாயகர் கலாநிதி அசோக ரன்வல தெரிவித்துள்ளார்.
பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது பாராளுமன்ற அமர்வு கடந்த 21ஆம் திகதி இடம்பெற்றது.
குறித்த முதல்நாள் அமர்வில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக விசேடமான ஆசன ஒதுக்கீடுகள் எதுவும் இருக்காது என்பதுடன், விரும்பிய ஆசனத்தில் அமர்வதற்கான வாய்ப்புக் கிடைக்குமென அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவரின் ஆசனத்தில் அமர்ந்திருந்த பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை அங்கிருந்த பாதுகாவலர்கள் வேறு ஆசனத்தில் அமரச் சொன்னதைத் தொடர்ந்து, ஒரு சில நிமிடங்கள் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
புதிய அமர்வில் எம்.பிக்கள் எங்கு வேண்டுமானாலும் அமரலாம். ஆனால், ஜனாதிபதி, பிரதமர் , எதிர்க்கட்சித்தலைவர் ஆசனங்களுக்கு வரையறை உள்ளது. சம்பிரதாயம் உள்ளது என்று பணியாளர் கூற ,சம்பிரதாயத்தை மாற்றத்தானே வந்திருக்கிறேன் என இராமநாதன் அர்ச்சுனா பதிலளித்தார்.
இவரது இந்த செயல்பாடானது சமூக வலைத்தளங்களில் பேசும் பொருளாக மாறியது.
இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் வகையில், வைத்தியர் அர்ச்சுனா தனது முகநூல் பக்கத்தில், “இலங்கை ஊடகங்கள் என்னை பயங்கரவாதியாக சித்தரிக்க விரும்புகின்றன என்று நான் நம்புகிறேன், அதனால்தான் நான் நேரடி நிகழ்ச்சிகளில் மட்டுமே பங்கேற்பேன்.” என தெரிவித்தார்
மேலும், தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பாக வைத்தியர் அரச்சுனா தொடர்ந்தும் சர்ச்சையை சந்தித்து வருகிறார்.
2024 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னர் அவர் தனது அரசாங்க மருத்துவ அதிகாரி பதவியை விட்டு விலக தவறியதாகக் கூறியும் முகநூல் நேரலை மூலமாக வைத்தியர் அர்ச்சுனா சர்ச்சைக்குரிய வார்த்தைப் பிரயோகங்களை முன்வைத்திருப்பதாக கூறியும் , பல அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.