டெல்லியில் இருந்து அமெரிக்காவுக்கு 40 நிமிடங்களில் செல்லலாம்

டெல்லியில் இருந்து அமெரிக்காவுக்கு 40 நிமிடங்களில் செல்லலாம்

உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், தனது தொழில்நுட்பங்கள் மூலம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். பெட்ரோல்-டீசலுக்கு மாற்றாக தனது டெஸ்லா காரை பேட்டரிகள் மூலம் இயக்கி வருகிறார். அதுவும் இந்த கார் டிரைவர் இல்லாமல் தானியங்கி முறையில் இயங்கும்.

உலகம் முழுவதும் இந்த டெஸ்லா காருக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. அதேபோல் தற்போது தண்ணீர் மூலம் கார் என்ஜின்கள் தயாரிக்கும் பணியினை அவரது நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

அதேபோல் மனித சிந்தனைகளை கம்ப்யூட்டர் புரிந்து கொள்ளும் வகையில் மனித மூளையில் சிப் வைத்து பரிசோதனை செய்து வருகிறார். அதன் ஆரம்பகட்ட பரிசோதனை வெற்றி பெற்று இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புதான் அவர் சமூக வலைத்தளமான டுவிட்டரை வாங்கி அதனை எக்ஸ் என பெயர் மாற்றம் செய்தார்.

அவரது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், நாசாவிற்கு இணையாக விண்ணில் ராக்கெட்டுகள் மற்றும் சாட்டிலைட்டுகளை செலுத்தி வருகிறது. அவரது சாட்டிலைட் மூலம் உலகின் எந்த பகுதியிலும் இணையதள வசதிகளை பெற முடியும்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் எலான் மஸ்க், டிரம்புக்கு ஆதரவாக தீவிர பிரசாரம் செய்தார். அவருக்கு அதிக நன்கொடையும் வழங்கினார். அதற்கு பிரதிபலனாக எலான் மஸ்க்-கிற்கு டிரம்ப் ஆட்சியில் சிறப்பு திறன் துறை என்ற ஒரு துறை உருவாக்கப்பட்டு அதன் தலைவராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

இந்த நிலையில் எக்ஸ் சமூக வலைதளத்திற்கு லோகோ வடிவமைப்பு செய்த டெஸ்லா என்ஜினீயர் அலெக்ஸ் ஒரு வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் டிரம்ப் ஆட்சியில் ஸ்டார்ஷிப் மூலம் உலகின் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு செல்வதற்கான அனுமதி சில ஆண்டுகளில் கிடைக்கும். இதன்மூலம் மக்கள் ஒரு நகரத்தில் இருந்து மற்றொரு நகரத்திற்கு ஒரு மணி நேரத்தில் சென்றுவிடலாம் என்று கூறியுள்ளார்.

அந்த வீடியோவில் நியூயார்க் நகரில் காலை 6.30 மணிக்கு பயணிகள் ஒரு கப்பலில் ஏறுகின்றனர். அந்த கப்பல் அவர்களை அழைத்து கொண்டு கடலில் அமைக்கப்பட்டுள்ள ராக்கெட் ஏவுதளத்திற்கு வருகிறது. பின்னர் பயணிகள் ராக்கெட்டில் ஏற்றப்பட்டு, விண்ணில் புறப்படுகின்றனர். அந்த ராக்கெட் 27 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் பயணித்து ஷாங்காய் நகரை 39 நிமிடத்தில் அடைந்து விடுகிறது.

அந்த வீடியோவில் இந்த ராக்கெட் மூலம் பயணம் செய்தால் ஒவ்வொரு நகரங்களுக்கு இடையே எவ்வளவு மணிக்குள் சென்றுவிடலாம் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

அதன்படி டெல்லி-சான்பிரான்சிஸ்கோ 40 நிமிடங்கள், லண்டன்-நியூயார்க் 29 நிமிடங்கள், டோக்கியோ-டெல்லி 30 நிமிடங்கள் என பல நகரங்களுக்கான பயண நேரங்கள் என வரையறுக்கப்பட்டுள்ளன.

தற்போது டெல்லியில் இருந்து அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகருக்கு நேரடியாக செல்லும் விமானத்தின் பயண தூரம் 15 மணி நேரம் ஆகும். ஆனால் ஸ்டார்ஷிப் ராக்கெட் மூலம் 40 நிமிடங்களில் சென்று விட முடியும். இந்த வீடியோவின் கமெண்ட் பகுதியில் எலான் மஸ்க், “இது இப்போது சாத்தியம்” என பதில் அளித்துள்ளார்.

அவரின் எதிர்கால திட்டத்திற்கான முன்னோட்டம் தான் இந்த வீடியோ வெளியீடு என்று எக்ஸ் பக்கத்தில் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )