அமைதியான தேர்தலுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும் தயார்

அமைதியான தேர்தலுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும் தயார்

பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், 70 ஆயிரம் பொலிஸார் உட்பட 90 ஆயிரம் பேர் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார் .

பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் விளக்கமளிக்கும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று (12) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதில் கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், “160 பாராளுமன்றத் தொகுதிகளுக்கு மொத்தம் 13 ஆயிரத்து 383 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து வாக்களிப்பு நிலையங்களிலும் சுமார் 64 ஆயிரம் பொலிஸ் அதிகாரிகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

இதற்கு அப்பால் 3 ஆயிரத்து 200 பொலிஸ் விசேட அதிரடிப் படை அதிகாரிகளும் கடமையில் ஈடுபடுவர். அண்ணளவாக 70 ஆயிரம் பொலிஸார் வரை பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடவுள்ளனர்.

இதற்கு மேலதிகமாக 12 ஆயிரத்து 227 சிவில் பாதுகாப்புப் பணியாளர்களும் நேரடியாகத் தேர்தல் கடமையில் ஈடுபடவுள்ளனர். சில முக்கிய இடங்களின் பாதுகாப்புக்காக 11 ஆயிரம் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

ஏதேனும் தேவை ஏற்பட்டால் மேலும் இராணுவத்தினர் தயார் நிலையில் உள்ளனர். பொலிஸார், முப்படையினர் அடங்களாக மொத்தமாக 90 ஆயிரம் வரையான பேர் தேர்தல் பாதுகாப்புக்காக நாடு முழுவதும் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

தேர்தல் நடைபெறும் நாளிலும் அதற்குப் பின்னரும் பொலிஸ் அதிகாரிகளைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இம்முறை தேர்தல் பிரசாரங்கள் சுமுகமாக இடம்பெற்றுள்ளதை அவதானிக்க முடிகின்றது. பெறுபேறுகள் வெளியாகி ஒரு வார காலத்துக்குச் சட்டத்தைக் கடுமையாக அமுல்படுத்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.” என தெரிவித்துள்ளார் .

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )