தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் மத்தியில் தேசிய மக்கள் சக்தி தொடர்பில் தவறான விம்பம் தோற்றுவிக்கப்படுகின்றது
அனைத்து இன மக்களினதும் இன, மத, மொழி மற்றும் கலாசார உரிமைகளை நாம் ஏற்கின்றோம். நல்லிணக்கமே எமது பிரதான இலக்கு. அப்படி இருந்தும் வடக்கு தமிழ் மக்கள் மத்தியில் எம்மை பற்றி கட்டுக்கதைகள் பரப்படுகின்றன. இதனை மக்கள் நம்பக்கூடாது என ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (04) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே இவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர், ” தேசிய மக்கள் சக்திக்கு எதிராக சூழ்ச்சி முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. குறிப்பாக தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் மத்தியில் தேசிய மக்கள் சக்தி தொடர்பில் தவறான விம்பம் தோற்றுவிக்கப்படுகின்றது. கடந்தகால திரிவுபடுத்தப்பட்ட கதைகள் சமூகவலைத்தளங்களில் பரப்பட்டுவருகின்றன.
அரசியல் ரீதியில் வங்குரோத்து அடைந்துள்ள சில கட்சிகளுக்கு கொள்கை ரீதியில் எம்முடன் மோத முடியாது. இதனால்தான் கட்டுக்கதைகள் பரப்பட்டுவருகின்றன. எனவே, வதந்திகளை மக்கள் நம்பக்கூடாது. இன மற்றும் மத ரீதியில் நாம் அநீதிகளை இழக்கமாட்டோம். அனைத்து இன மக்களினதும் இன, மத, மொழி, கலாசார உரிமைகளை ஏற்று மதிக்கின்றோம். இன, மத, மொழி பேதமற்ற இலங்கையை கட்டியெழுப்புவதே எமது இலக்காகும்.
வங்குரோத்தடைந்துள்ள எதிரணிகள் கட்டுக்கதைகளை பரப்பியே தற்போது அரசியல் நடத்த முற்படுகின்றன. குறிப்பாக வடக்கில் தமிழ் மக்கள் மத்தியிலும், நாம் சொல்லாத விடயங்களை பரப்பி, தவறான விம்பத்தை தோற்றுவிப்பதற்கு முற்படுகின்றனர். இவ்வாறான கதைகளை மக்கள் நம்பக்கூடாது. இப்படியான கதைகளை பரப்புபவர்களை மக்கள் தோற்கடிக்க வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.