வெள்ள பாதிப்புகளை பார்வையிட சென்ற ஸ்பெயின் மன்னர் மீது மண்ணை வீசிய பொதுமக்கள்

வெள்ள பாதிப்புகளை பார்வையிட சென்ற ஸ்பெயின் மன்னர் மீது மண்ணை வீசிய பொதுமக்கள்

ஸ்பெயின் நாட்டின் தென்கிழக்கு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் ஸ்பெயில் உள்ள போரியோடேலா டோரெ மற்றும் வேலன்சியா உள்ளிட்ட நகரங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

சுமார் 5 ஆயிரம் வீடுகள் தண்ணீரில் மூழ்கின. கார்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

வரலாறு காணாத அளவில் ஏற்பட்ட பெருவெள்ளத்தின் காரணமாக ஸ்பெயினில் இதுவரை 213 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் ஏராளமானோர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு மாயமாகி இருப்பதாக கூறப்படுகிறது. வெள்ளப்பெருக்கின்போது மக்கள் வீட்டுக் கூரைகளின் மீது ஏறியும், மரங்களைக் கட்டி அணைத்தும் உயிர் தப்பி உள்ளனர்.

இதற்கிடையில் கடும் வெள்ளப்பெருக்கால் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதுடன், குடிநீர் கிடைக்காமலும் ஏராளமானோர் அவதியடைந்துள்ளனர்.

இந்த வெள்ளத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது வீடு, உடைமைகள் உள்ளிட்ட அனைத்தையும் இழந்துள்ளனர். ஸ்பெயின் நாட்டு மக்களை உலுக்கிய இந்த வெள்ள பாதிப்பு காரணமாக, நாடு முழுவதும் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அந்நாட்டு பிரதமர் பெட்ரோ சான்செஸ் உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில், வெள்ளத்தால் மோசமாக பாதிக்கப்பட்ட பைபோர்ட்டா நகரத்தில், வெள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிடுவதற்காக அந்நாட்டின் மன்னர் பெலிப்பே தனது மனைவி ராணி லெட்டிசியாவுடன் சென்றார். அப்போது அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் ஸ்பெயின் மன்னர் மீது மண்ணை அள்ளி வீசினர்.

இருப்பினும் அங்கிருந்த மக்களுடன் நிதானமாக நின்று பேசுவதற்கு மன்னரும், அவரது மனைவியும் முயன்றனர். இதனிடையே பாதுகாப்பு கருதி மன்னரையும், அவரது மனைவியையும் பாதுகாவலர்கள் அங்கிருந்து அழைத்துச் சென்றனர். அங்கிருந்த மக்கள் ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸை கடுமையாக விமர்சித்து கோஷங்களை எழுப்பியது குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )