பதுளை பேருந்து விபத்து தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு அறிக்கை !

பதுளை பேருந்து விபத்து தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு அறிக்கை !

பிரேக் கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே, பதுளை – மஹியங்கணை வீதியின் அம்பகஹஒய பகுதியில் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பேருந்து விபத்துக்குள்ளானதாகப் பாதுகாப்பு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

சூரியவௌ பகுதியில் உள்ள கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் தெற்கு வளாகத்தில் உள்ள மாணவர்கள் சென்ற பேருந்து நேற்று விபத்துக்குள்ளானது.

இதன்போது 23 வயதுடைய இரண்டு மாணவர்கள் உயிரிழந்ததுடன் 39 பேர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்களில் 6 பேர் தொடர்ந்தும் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தநிலையில் குறித்த விபத்து தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதன்படி, விபத்து ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் குறித்த பேருந்தில் 36 மாணவர்கள் மற்றும் 3 விரிவுரையாளர்கள் உட்பட 41 பேர் பயணித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் உயிரிழந்த இரண்டு மாணவர்களினதும் இறுதி கிரியைகள் தொடர்பான செலவுகள் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தினால் மேற்கொள்ளப்படவுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் பாதுகாப்பு செயலாளரின் ஆலோசனைக்கு அமைய, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களைக் கொழும்புக்கு அழைத்து வருவதற்காக பெல் 412 ரக உலங்கு வானூர்தி ஒன்று தயார் நிலையில் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )