அநுரகுமார திஸாநாயக்க பெரும்பான்மை பலத்தை பெறாத ஜனாதிபதியாவார்
“ அநுரகுமார திஸாநாயக்க பெரும்பான்மை பலத்தை பெறாத ஜனாதிபதியாவார். அவர் தலைமையிலான அரசு மூன்று மாதங்களுக்கேனும் பயணிக்குமா என்பது சந்தேகமே” என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கம்பஹா பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், “ இந்த ஆட்சிக்கு மூன்று மாதங்கள்தான் என்ற விமர்சனம் உள்ளது. ஜனாதிபதி முன்னோக்கி பயணிக்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும். சிலவேளை ஜனாதிபதிக்கு எதிராக அவர்களின் கட்சியிலேயே குற்றப் பிரேரணை கொண்டுவந்தால் இந்நிலைமை மாறக்கூடும்.
பொதுத்தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் அனுபவமற்றவர்களே தேசிய மக்கள் சக்தி பட்டியலில் உள்ளனர். அக்கட்சியினரின் வேட்பாளர் பட்டியலை பார்த்தால், மூன்று மாதங்கள் அல்ல, மூன்று வாரங்களுக்கேனும் இந்த ஆட்சியால் பயணிக்க முடியுமா என தெரியவில்லை.
தேர்தலில் தோற்றால் வீட்டில் இருக்குமாறு ஜனாதிபதி எனக்கு கூறியுள்ளார். தோல்வியை நான் ஏற்கின்றேன். மக்கள் எனக்கு பெரும்பான்மையை வழங்கவில்லை. அதனால் தோற்றேன். அதேபோல ஜனாதிபதி அநுரகுமாரவுக்கு பெரும்பான்மை பலம் வழங்கப்படவில்லை.
அவருக்கு 50 சதவீதத்துக்கு மேல் வாக்கு கிடைக்கவில்லை. அவருக்கும், எனக்கும் இடையிலான வித்தியாசம் என்ன? பெரும்பான்மை பலம் கிடைக்காத முன்னாள் ஜனாதிபதி நான், பெரும்பான்மை கிடைக்காத இந்நாள் ஜனாதிபதி அநுர. இதுதான் வித்தியாசம்.
நாட்டில் தேங்காய்க்கு கூட வரிசை உருவாகியுள்ளது. அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கும் தீர்மானத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.