புதிய ஜனாதிபதியின் ஆட்சியில் தீபாவளியைக்கூட சந்தோஷமாக கொண்டாட முடியாதளவுக்கு பொருளாதார சுமை காணப்படுகின்றது
“பொருளாதாரப் போரில் இருந்து மக்களை மீட்போம் என சிவப்புத் தோழர்கள் கொக்கரித்தார்கள். ஆனால் இன்று பொருட்களின் விலைகள் எகிறியுள்ளன. தமிழ் மக்களின் பாரம்பரிய பண்டிகையான தீபாவளியைக்கூட சந்தோஷமாக கொண்டாட முடியாதளவுக்கு பொருளாதார சுமை காணப்படுகின்றது.” என புதிய ஜனநாயக முன்னணியின் கீழ் கண்டி மாவட்டத்தில் கேஸ் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடும் வேலுகுமார் தெரிவித்துள்ளார்.
தாங்கள் ஆட்சிக்கு வந்தால் தேனும், பாலும் பாய்ந்தோடும் நாடாக இலங்கை மாறும் என்றார்கள், அப்படி பாரிய மாற்றங்கள் ஏதும் நடந்ததாக தெரியவில்லை எனவும் அவர் கூறினார்.
மேலும் அவர் ,“ரணில் விக்ரமசிங்க ஆட்சியின்போது வழங்கப்பட்ட அஸ்வெசும கொடுப்பனவு போதாது எனவும், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மக்களின் வாழ்வாதாரம் மேம்படும் எனவும் தேசிய மக்கள் சக்தியினர் கூறிவந்தனர். எனவே, அஸ்வெசுமவை விட அதிக கொடுப்பனவு வழங்கப்படும் என மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.
மக்களின் வாழ்க்கை சுமையும் குறையவில்லை. மாறாக நாளாந்தம் பொருட்களின் விலைகள் அதிகரித்துவருகின்றன. இதனால் பெருந்தோட்டப் பகுதிகளில் உள்ள மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தீபாவளி பண்டிகை பெருந்தோட்டப் பகுதிகளில் சிறப்பாக கொண்டாடப்படும். ஆனால் பொருட்களின் விலைகளை பார்க்கும் போது, கொண்டாடுவதைவிட்டு விட்டு திண்டாட வேண்டிய நிலையே காணப்படுகின்றது.
அதேவேளை, கட்சி, தேர்தல் அரசியலைவிட நாடுதான் முக்கியம் என்று தேசிய மக்கள் சக்தியினர் கூறிவந்தனர். ஆனால் பிரிக்ஸ் மாநாட்டுக்கு அழைப்பு விடுத்தும் ஜனாதிபதி செல்லவில்லை. இதன்மூலம் எமக்கு இராஜதந்திர ரீதியில் கிடைக்கவிருந்த பல நன்மைகள் இல்லாமல்போயுள்ளன.
நாட்டில் தேர்தல் நடைபெறுவதால்தான் ஜனாதிபதி போகவில்லையாம். நாட்டைவிட தேர்தல்தான் முக்கியம் எனில் அவர்கள் கூறிய மாற்றம் அதுதானா?
பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாடும் நடைபெற்றது. அதிலும் ஜனாதிபதி பங்கேற்கவில்லை. அரச தலைவர்கள் மாநாட்டுக்கு அதிகாரிகளை அனுப்புவதன்மூலம் முழு நன்மையும் கிடைக்கப்பெறபோவதில்லை. இதுதொடர்பில் சிவப்பு தோழர்கள் கூறப்போவது என்ன?” என தெரிவித்துள்ளார்.