கருத்தியல் பேசிக் கொள்கை நாடகம்… கூடவே இருந்து நம்மை ஆள்கிறார்கள் ஊழல் கபடதாரிகள் !
பிரிவினைவாதம், ஊழல் கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும். 2026 சட்டப்பேரவை தேர்தலில் தனிப்பெரும்பான்மையோடு வெற்றி பெறுவோம்.என தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் கட்சித் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு பிரம்மாண்டமாக நேற்றைய தினம் நடைபெற்றது.
குறித்த மாநாட்டில் உரையாற்றிய கட்சித் தலைவர் விஜய்,
‘ நம் கொள்கைகளின் அடையாளமாக மாறியவர் பெரியார். ஆனால், அவர் சொன்ன கடவுள் மறுப்பு கொள்கையை நாங்கள் கையில் எடுக்கப் போவதில்லை.
‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்பதே நம் கொள்கை.
அடுத்து, நேர்மையான நிர்வாகம் தந்த காமராஜர், அரசியல் சாசனம் உருவாக்கிய அம்பேத்கர், வீரமிக்க பெண்களான வேலுநாச்சியார், அஞ்சலை அம்மாள். இவர்கள் எல்லாம்தான் நம் கொள்கை தலைவர்கள். பிரிவினைவாத சித்தாந்தம் மட்டுமின்றி, ஊழல் மலிந்த கலாச்சாரத்தையும் ஒழிக்க வேண்டும். கருத்தியல் பேசி கொள்கை நாடகம் போடும் கபடதாரிகள்தான் இப்போது ஆண்டுகொண்டு இருக்கிறார்கள்.
மக்கள் விரோத ஆட்சியை ‘திராவிட மாடல் ஆட்சி’ என்று கூறி ஏமாற்றுகின்றனர்.
எங்கள் கட்சி வண்ணம் தவிர வேறு வண்ணத்தை எங்கள் மீது பூச முடியாது. மதசார்பற்ற சமூக நீதி கொள்கையை முன்னிறுத்தி செயல்பட உள்ளோம். எங்கள் அரசியல் பயணத்தில் முக்கிய பங்கு வகிக்கப்போவது பெண்கள். எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்பதே என் அரசியல் குறிக்கோள்.
இனி என்னை ‘கூத்தாடி கூத்தாடி’ என்று கூப்பாடு போடுவார்கள். எம்ஜிஆர், என்டிஆரை அப்படி கூப்பிட்டவர்கள்தான் அவர்கள்.
ஆனால், இன்றைக்கும் அந்த தலைவர்கள் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
என் சினிமா உச்சத்தை உதறிவிட்டு வந்துள்ளேன்
பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு, கல்வி, மருத்துவம், பாதுகாப்பான குடிநீர் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதுதான் நம் செயல்திட்டங்களில் முக்கியமானது.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். மக்களோடு மக்களாக நாம் களத்தில் இருக்கப் போகிறோம்.
2026 சட்டப்பேரவை தேர்தலில் நம்மை தனிப்பெரும்பான்மையோடு மக்கள் வெற்றி பெற வைப்பார்கள்.
மக்கள் ஒற்றை விரலில் அழுத்தும் வாக்குகள் நம் எதிரிகள் மீது ஜனநாயக ரீதியாக அணுகுண்டாக விழும்.
நம் கொள்கைகளை ஏற்றுக்கொண்டு வருபவர்களுக்கு ஆட்சி, அதிகாரத்தில் பங்களித்து அதிகாரப் பகிர்வு செய்யப்படும். நல்லதே நடக்கும், வெற்றி நிச்சயம்.
பெண்கல்வி, பெண்கள் முன்னேற்றம், சமூக சீர்திருத்தம், சமீக நீதி, பகுத்தறிவு சிந்தனை ஆகிய எல்லாவற்றையும் நாம் முன்னெடுத்து செல்ல போகிறோம்.
பிளவுவாத அரசியல் செய்பவர்கள் தான் எங்கள் கட்சியில் முழுமுதல் கொள்கை எதிரி.
அடுத்ததாக திராவிட மாடல் என்று சொல்லி கொண்டு பெரியார், அண்ணா பேரை பயன்படுத்திக்கொண்டு தமிழ்நாட்டை சுரண்டி கொள்ளையடிக்கும் குடும்ப சுயநல கூட்டம் தான் நம்முடைய இரண்டாவது எதிரி
என்னுடைய சொந்த தங்கை வித்யா இறந்தபோது எனக்கு ஏற்பட்ட அதே பாதிப்பு தான் தங்கை அனிதா இருந்தபோதும் எனக்கு ஏற்பட்டது.
கொள்கை அளவில் திராவிடத்தையும் தமிழ்த்தேசியத்தையும் நாங்கள் பிரித்து பார்க்கப்போவது கிடையாது.
திராவிடமும் தமிழ்த்தேசியமும் இந்த மண்ணுடைய இரு கண்கள்.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற புரட்சிகர தத்துவத்தின் அடிப்படையில் சமத்துவ சமதர்ம சமுதாயத்தை உருவாக்குவது தான் நமது நோக்கம்.
எங்களோடு சேர்ந்து பயணிக்க விரும்பும் அரசியல் கட்சிகளை நாங்கள் வரவேற்கிறோம்.
ஆட்சி அதிகாரத்தில் கூட்டணி கட்சிகளுக்கு பங்கு வழங்கப்படும், அதிகாரப் பகீர்வு வழங்கப்படும், இந்த மாற்று அரசியல் மாற்று சக்தி, அதை செய்யுறேன், இதை செய்யுறேன் என்று சொல்லி ஏமாற்று வேலை செய்ய நான் இங்கு வரவில்லை.
ஏற்கனவே இருக்கும் 11-12 இருக்குற அரசியல் கட்சிகளில் நானும் ஒரு ஆளாக மாற்று அரசியல் என்று சொல்லிக்கொண்டு இருக்க நான் இங்கு வரவில்லை. மாற்று அரசியல் மாற்று சக்தி என ஏமாற்றுவது எங்கள் வேலை இல்லை. ஏமாற்று சக்திகளிடம் இருந்து மக்களை பாதுகாப்பது தான் எங்களது வேலை. ‘என தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் கட்சித் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.