பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணைகள் ஒத்திவைப்பு
பாராளுமன்றத் தேர்தலை எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி நடத்துவது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று தீர்ப்பளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை எதிர்வரும் 4ஆம் திகதி விசாரணைக்கு எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த மனு இன்று (24) உச்ச நீதிமன்ற நீதியரசர் அர்ஜுன ஒபேசேகர முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
மனு தொடர்பில் ஆட்சேபனைகள் இருப்பின், அவற்றை இம்மாதம் 28ஆம் திகதிக்கு முன்னர் தாக்கல் செய்யுமாறு பிரதிவாதிகளுக்கு நீதிபதி உத்தரவிட்டார். ஆட்சேபனைகள் இருந்தால், நவம்பர் 1ம் திகதிக்குள் தாக்கல் செய்ய மனுதாரருக்கு நீதிபதி கால அவகாசம் வழங்கினார்.
சிவில் அமைப்பு செயற்பாட்டாளரும் “நாம் ஸ்ரீ லங்கா தேசிய அமைப்பின்” ஒருங்கிணைப்பாளர் எச். எம். பிரியந்த ஹேரத்தினால் இந்த மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் சார்பில் சட்டமா அதிபர், ஜனாதிபதியின் செயலாளர், தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் ஏனைய உறுப்பினர்கள் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
இதேவேளை பொதுத் தேர்தலுக்கான தினத்தைக் குறிப்பிட்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் சட்டரீதியாகவே வெளியிடப்பட்டது. இதுவரையில், தேர்தல் ஆணைக்குழுவும் தேர்தலுக்கான திகதி அறிவிப்பு தொடர்பில் எவ்வித மறுப்பையும் தெரிவிக்கவில்லை.
அதற்கப்பால் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்கிறார்களென்றால் அதற்கு உரிமை இருக்கிறது. நீதிமன்றத் தீர்மானத்தை நாங்கள் அவ்வாறே ஏற்றுக்கொள்வோமென்று அமைச்சரவைப் பேச்சாளர் விஜித ஹேரத் நேற்று முன்தினம் குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.